விஜயநகரா, ஹூவினஹடகலி கிராமத்தில் வசித்தவர் ரத்னம்மா, 35. இவர் மைக்ரோ நிதி நிறுவனத்தில், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினார். இதை அடைக்காததால், இரண்டு நாட்களாக நிதி நிறுவன ஊழியர்கள், அவரது வீட்டு முன் தகராறு செய்தனர். இதனால் அவமானம் அடைந்த ரத்னம்மா, நேற்று மதியம் வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஹூப்பள்ளியின் காமனகட்டி தொழிற்பகுதியில், பண்ணை வீட்டில் நேற்று முன் தினம் காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில், சுபாஷ் மோகன் ராம், 26, காயம் அடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சை பெற்றனர்.
பாகல்கோட்டின், கூடலசங்கமா கிராஸ் அருகில், சில ஆண்டுகளுக்கு முன்பு, லாரி ஓட்டுநர் அலட்சியமாக லாரி ஓட்டி வந்து, எதிரே வந்த டெம்போ மோதினார். இதில் பயணம் செய்த எல்லப்பா மாதரா காயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பாகல்கோட் ஜி.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் அவரது குற்றம் உறுதியானதால், அவருக்கு ஓரண்டு சிறை, 7,500 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.