ADDED : ஜூலை 02, 2024 06:49 AM
சிறையில் மோதல்; இருவர் காயம்
தட்சிணகன்னடா, மங்களூரின், கோடியாலா பைலில் உள்ள மத்திய சிறையில், நேற்று மாலை கைதிகளுக்கு இடையே, கோஷ்டி பூசல் ஏற்பட்டது. பரஸ்பரம் தாக்கி கொண்டனர். இதில் இரு கைதிகள் காயமடைந்து, சிகிச்சை பெறுகின்றனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
பெங்களூரு, மாரத்தஹள்ளி மேம்பாலம் அருகில் வசிப்பவர் ஜெயலட்சுமி. இவர் நேற்று முன் தினம் நள்ளிரவு, கணவருடன் வெளியே சென்று, பைக்கில் வீட்டுக்கு வந்தார்.
பைக்கில் இருந்து இறங்கி, கேட் அருகில் செல்லும் போது, பைக்கில் வந்த இரண்டு மர்மநபர்கள், ஜெயலட்சுமி கழுத்தில் இருந்த, 35 கிராம் எடையுள்ள தங்க செயினை பறித்து கொண்டு தப்பினர்.
சாலை விபத்தில் இளைஞர் பலி
பெங்களூரின், குருபரஹள்ளியில் வசித்தவர் குமாரசாமி, 28. இவர் நேற்று அதிகாலை, பொம்மனஹள்ளி ஆக்ஸ்போர்டு காலேஜ் அருகில், சர்வீஸ் சாலையில் பைக்கில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்து சாலை டிவைடர் மீது மோதி, விபத்துக்கு உள்ளானது. இதில் காயமடைந்த அவர் உயிரிழந்தார்.
கிணற்றில் குதித்து ஏட்டு தற்கொலை
பெங்களூரின், மடிவாளா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் சிவராஜ், 29. இவருக்கு 3 மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது. குடும்ப பிரச்னையால், தம்பதி பிரிந்திருந்தனர்.சிவராஜ் ஜூன் 26ல் காணாமல் போனார். இவரை குடும்பத்தினர் தேடிய நிலையில், ஞானபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிணற்றில், இவர் நேற்று இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.