21 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவை
21 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவை
ADDED : மே 04, 2024 11:50 PM
புதுடில்லி: நான்காம் கட்ட லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், 21 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, அசாம், அருணாச்சல், பீஹார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 21 மாநிலங்களில், 102 தொகுதிகளுக்கு, ஏப்., 19ல் முதற்கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்தது.
ஓட்டுப்பதிவு
இதைத் தொடர்ந்து, கேரளா, கர்நாடகா, ம.பி., - ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில், 88 தொகுதிகளுக்கு, ஏப்., 26ல், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு நடந்தது.
அசாம், பீஹார், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களில், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது.
ஆந்திரா, ஜார்க்கண்ட், ம.பி., உள்ளிட்ட 10 மாநிலங்களில், 96 தொகுதிகளுக்கு, வரும் 17ல் நான்காம் கட்ட லோக்சபா தேர்தல் நடக்கிறது.
இந்த நான்காம் கட்ட தேர்தலில், மொத்தம், 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், 1,710 பேர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்தது. இதனடிப்படையில், ஏ.டி.ஆர்., நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மொத்தம், 1,710 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 360 வேட்பாளர்கள் அதாவது, 21 சதவீத பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 17 பேர் குற்றவாளிகள் என, நீதிமன்றங்களால் அறிவிக்கப்பட்டவர்கள்.
மேலும், 11 பேர் மீது கொலை வழக்குகள்; 30 பேர் மீது கொலை முயற்சி வழக்குகள்; 50 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மற்றும் ஐந்து பேர் மீது பலாத்கார வழக்குகள் உள்ளன.
பா.ஜ.,வின் 70 வேட்பாளர்களில், 40 பேர்; காங்., 61 வேட்பாளர்களில் 35 பேர்; பாரத் ராஷ்ட்ர சமிதி 17 வேட்பாளர்களில் 10 பேர்; ஒய்.எஸ்.ஆர்.காங்., 25 வேட்பாளர்களில் 12 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
முதலிடம்
மொத்தமுள்ள 1,710 வேட்பாளர்களில், 476 பேர் கோடீஸ்வரர்கள். தெலுங்கு தேசம் வேட்பாளர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி, 5,700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அதே சமயம், 24 வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்பு பூஜ்யம் என, அறிவித்துள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.