மாடு என விமர்சிக்கலாமா? அமைச்சருக்கு நிரானி சவால்!
மாடு என விமர்சிக்கலாமா? அமைச்சருக்கு நிரானி சவால்!
ADDED : செப் 01, 2024 11:39 PM

பாகல்கோட்,: ''என்னை மாடு என்று அமைச்சர் விமர்சித்து உள்ளார். எனக்கும் தரக்குறைவாக பேச தெரியும்,'' என, அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு, பா.ஜ., முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானி சவால் விட்டு உள்ளார்.
பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தொழில் அமைச்சர் எம்.பி.,பாட்டீல் அரசு நிலத்தை சட்டவிரோதமாக தொழிற்சாலைக்கு ஒதுக்கி உள்ளார் என்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், சமூக ஆர்வலர் ஆபிரகாம் புகார் செய்து உள்ளார்.
இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அரசியல் வாழ்க்கையில் இதுவரை ஊழல் செய்யவில்லை என, பெற்றோர் மீது அவர் சத்தியம் செய்ய வேண்டும்.
நான் அமைச்சராக இருந்த போது, விஜயபுரா, பாகல்கோட் மாவட்டங்களுக்கு எனது பங்களிப்பு என்ன என்பது மக்களுக்கு நன்கு தெரியும். இரு மாவட்டங்களுக்கும் எம்.பி.பாட்டீல் பங்களிப்பு என்ன. கடந்த 15 ஆண்டுக்கு முன்பே, நான் தொழில் அமைச்சர் ஆனேன்.
என்னை மாடு என்று அவர் விமர்சித்து உள்ளார். எனக்கும் தரக்குறைவாக பேச தெரியும்.
விஜயபுரா கார்ஜோள் பகுதியில், ஏழை மக்களுக்கு வேலை கிடைக்கும் வகையில், சர்க்கரை ஆலை அமைக்க முடிவு செய்தேன். நான் வாங்க நினைத்த நிலத்தை, வேறு ஒருவருக்கு விற்று விட்டனர். ஏழைகள் பாவம் உங்களை சும்மா விடாது.
இவ்வாறு அவர் கூறினார்.