கூட்டமாக வீடு தேடி வந்த முதலைகள்; பீதியில் குஜராத் மக்கள்
கூட்டமாக வீடு தேடி வந்த முதலைகள்; பீதியில் குஜராத் மக்கள்
ADDED : செப் 02, 2024 06:42 AM

வதோதரா: குஜராத்தின் வதோதராவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 24 முதலைகளை வனத்துறையினர் மீட்டு ஆற்றுக்குள் விட்டனர்.
குஜராத் மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். 24 ஆறுகள், 137 நீர்த்தேக்கங்களில் வெள்ள அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது.
அஜ்வா அணை நிரம்பியதைத் தொடர்ந்து அதில் இருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
440 முதலைகளுக்கு இந்த அணை புகலிடமாக இருந்த நிலையில், வெள்ள நீரில் பல முதலைகள் அடித்து வரப்பட்டு வதோதரா நகரில் பல இடங்களில் உலாவத் துவங்கின. சமீபத்தில், தபோய் பகுதியில் முதலை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். மீன் பிடிக்க வலை விரித்த போது முதலை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், மக்கள் இடையே பீதி ஏற்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் 24 முதலைகளை பிடித்து மீண்டும் விஸ்வாமித்ரி அணைக்குள் விட்டனர்.
இத்துடன் பாம்புகள், ராஜநாகங்கள், ஆமைகள் உள்ளிட்ட 75 உயிரினங்களும் குடியிருப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டன. முதலைகள் மனிதர்களை தாக்காது என விளக்கமளித்து உள்ள அதிகாரிகள், அவை பசு, எருமை உள்ளிட்ட கால்நடைகளை தான் தாக்கும் எனவும் கூறியுள்ளனர்.