70 டாலராக்கும் கீழ் இறங்கியது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை * 3 ஆண்டுகளில் இல்லாத சரிவு
70 டாலராக்கும் கீழ் இறங்கியது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை * 3 ஆண்டுகளில் இல்லாத சரிவு
ADDED : செப் 12, 2024 01:09 AM
புதுடில்லி:பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும், 13 நாடுகள் அடங்கிய 'ஓபெக்' கூட்டமைப்பின் முன்பேர சந்தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரு பேரல் 70 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. ஒரு பேரல், தோராயமாக 159 லிட்டர் கொள்ளளவு கொண்டது; இந்திய ரூபாய் மதிப்பில், 5,920 ரூபாய்; ஒரு லிட்டர் விலை 37 ரூபாய்.
கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கான உலகளாவிய அளவுகோலாக இருக்கும் 'பிரன்ட்' கச்சா எண்ணெய், ஒரு பேரல் 69.19 டாலருக்கும்; 'வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்' அளவுகோல் வகை, 65.75 டாலருக்கும் விற்பனையானது. இதற்கு முன், 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 70 டாலராக குறைந்திருந்த நிலையில், தற்போது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், 70 டாலருக்கு கீழ் முதல்முறையாக சரிந்துள்ளது.
நடப்பாண்டில், 'ஓபெக்'கிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகளின் கச்சா எண்ணெய் தேவை, தினசரி, 20.30 லட்சம் பேரல்களாக இருக்கும் என, அவ்வமைப்பு நேற்று தெரிவித்தது. இது, அந்த அமைப்பின், கடந்த மாத கணிப்பான, தினசரி 21.10 லட்சம் பேரல்களைவிட குறைவு. மேலும், அடுத்த ஆண்டுக்கான, தினசரி கச்சா எண்ணெய் தேவையும் தன் முந்தைய கணிப்பான, 17.80 லட்சம் பேரல்கள் என்பதை 17.40 லட்சம் பேரல்கள் என ஒபெக் குறைத்து கணித்துள்ளது.
கச்சா எண்ணெய் தேவை குறையக்கூடும் என்ற இந்த எதிர்மறை தகவலால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவை சந்தித்தது. உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான சீனாவில் இருந்து ஆர்டர்கள் குறைந்ததும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு காரணமானதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டைவிட சீனாவில் இந்த ஆண்டு இதுவரை, கச்சா எண்ணெய் இறக்குமதி மூன்று சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அங்கு விற்பனையாகும் வாகனங்களில், பெட்ரோல், டீசல், எரிவாயு மாடல்களை பின்னுக்கு தள்ளி, மின்சார வாகனங்கள் கிட்டத்தட்ட 51 சதவீத இடத்தைப் பிடித்தது, அந்நாட்டின் கச்சா எண்ணெய் தேவை குறையக் காரணமாகி உள்ளது.
ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசல் மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை:சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்து, ஒரே விலையில் விற்க கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.கனகராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு:
பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை, இதுவரை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் மத்திய அரசு கொண்டு வரவில்லை; ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வந்தால், அவற்றின் விலை குறையும். பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாநில அரசுகளும் வரி விதிப்பதால், ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
கச்சா எண்ணெய் கொள்முதலுக்கும், விற்பனைக்கும் இடையேயான விலையை பார்க்கும்போது, நுகர்வோரின் தலையில் அதிக சுமை சுமத்தப்படுகிறது. பெட்ரோல் நிலையங்கள், காஸ் நிலையங்களில், அதிக விலை கொடுத்து வாங்குவதால், சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அரசு முறையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை, சாதாரண மக்கள் பயன்படுத்த முடியும். ஆண்டுதோறும் 30,000 கோடி ரூபாய் முதல் 40,000 கோடி ரூபாய் வரை, மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. அதை மத்திய அரசு திடீரென நிறுத்தி விட்டது.
பெட்ரோலிய பொருட்களுக்கான வரி விதிப்பால், அதன் விலையும் அதிகரிக்கிறது. அதனால், சாதாரண பொது மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வரும்படி, நாடு முழுதும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வந்தால், நுகர்வோருக்கு பாதிப்பு இருக்காது. எனவே, வரி விதிப்பை குறைத்து, இந்தியா முழுதும் பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையை குறைத்து, ஒரே விலையை கொண்டு வர, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரரான வழக்கறிஞர் கனகராஜ் ஆஜராகி, ''தற்போது, ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. மக்களுக்கு, இதன் பலன் போய் சேரவில்லை. ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வந்தால், 100 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் விலை, 60 முதல் 70 ரூபாயாக குறையும்,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல் அமர்வு, 'அரசின் கொள்கை முடிவு என்பதால், எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்' என, கேள்வி எழுப்பியது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இதே போன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, மத்திய அரசு என்ன முடிவெடுத்தது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்' என்றார்.
இதையடுத்து, மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, நான்கு வாரங்களுக்கு முதல் அமர்வு தள்ளி வைத்தது.