ADDED : பிப் 16, 2025 07:13 AM

மைசூரு : ''எனக்கும் கூட சைபர் மோசடியாளர்களிடம் இருந்து, அழைப்பு வருகிறது. ஆனால் நான் அவர்களின் சதி வலையில் சிக்கவில்லை. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் தெரிவித்தார்.
மைசூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
என் மொபைல் போனுக்கும், சைபர் மோசடியாளர்களிடம் இருந்து எனக்கு, அவ்வப்போது அழைப்பு வருகிறது. ஓடிபி எண்ணை தெரிவிக்கும்படி கேட்கின்றனர். நான் அதை பொருட்படுத்துவது இல்லை. அவர்களின் சதி வலையில், நான் சிக்கியது இல்லை.
என் நண்பர்கள் பலரும், சைபர் குற்ற வலையில் சிக்கி கொண்டுள்ளனர். சைபர் கிரிமினல்கள் தொழில்நுட்பத்தின் மூலம், குற்றம் செய்கின்றனர். தொழில்நுட்பம் பயன்படுத்தும் போது, குற்றங்கள் அதிகரிப்பது சகஜம்.
கர்நாடகாவில் சைபர் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இது குறித்து விழிப்புணர்வு துவங்கியுள்ளது. மைசூரை சைபர் குற்றங்கள் இல்லா மாவட்டமாக்க போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.