ADDED : ஆக 23, 2024 11:15 PM

உத்தர கன்னடா: அரபிக்கடலில் சூறாவளி காற்று வீசியதால், கார்வார் கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள், நங்கூரம் போட்டு மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தினர்.
கர்நாடகாவின் அரபிக்கடலில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பயங்கரமான சூறாவளி காற்று வீச ஆரம்பித்தது.
ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததால், மீனவர்கள் அச்சப்பட்டனர். உடனே நுாற்றுக்கணக்கான மீனவர்கள், தங்கள் படகுகளுடன் அருகில் உள்ள கார்வார் கரைக்குத் திரும்பினர். கடற்கரையில் நங்கூரம் போட்டு, ஏராளமான மீனவ படகுகள் நிறுத்தப்பட்டன. கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கேரளா மீனவர்களும் இங்கு கரையேறி உள்ளனர்.
மீனவர்கள் சங்க நிர்வாகி விநாயக் ஹரிகந்த்ரா கூறியதாவது:
கார்வாரில் உள்ள வர்த்தக மற்றும் மீனவ துறைமுகம், பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளது. மலைகளுக்கு நடுவில் துறைமுகம் கட்டி இருப்பதால், சூறாவளி காற்று வீசும்போது, படகுகள் பாதுகாப்பாக நிறுத்த சிறந்த இடமாகும்.
எனவே அரபிக்கடலில் சூறாவளி காற்று வீச ஆரம்பித்ததும், பாதுகாப்பு கருதி, மீனவர்கள் தங்கள் படகுகளுடன் கார்வார் துறைமுகத்துக்குத் திரும்பினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சூறாவளி காற்று குறைந்ததும், மீண்டும் மீன் பிடிக்க, மீனவர்கள் கடலுக்குச் செல்ல உள்ளனர். மற்ற மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள், 'தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்' என்று தங்களின் குடும்பத்தினருக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.