அதிக மழையால் பயிர்கள் பாதிப்பு : விவசாய உற்பத்தி குறையும் அபாயம்
அதிக மழையால் பயிர்கள் பாதிப்பு : விவசாய உற்பத்தி குறையும் அபாயம்
ADDED : ஆக 25, 2024 09:50 PM
பெங்களூரு:
கர்நாடகாவின் 15 மாவட்டங்களில் ஆகஸ்டில் மிக அதிகமான மழை பெய்துள்ளது. குளிர்ச்சி தன்மை அதிகம் உள்ளது. இதன் விளைவாக விவசாய உற்பத்தி குறையும் என, அஞ்சப்படுகிறது.
கர்நாடகாவின் தென் பகுதிகளில், ஆகஸ்ட் 1 முதல் 23 வரை 6.39 செ.மீ., வழக்கமான மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 14 செ.மீ., மழை பெய்துள்ளது.
வடக்கில் 8.93 செ.மீ., க்கு பதிலாக, 11.24 செ.மீ., மழை பெய்தது. தாவணகெரே, துமகூரு, கோலார், சித்ரதுர்கா, சாம்ராஜ்நகர் உட்பட பல மாவட்டங்களில் வழக்கத்தை விட, இரண்டு மடங்கு அதிக மழை பெய்துள்ளது.
மழை அதிகம் பெய்த மாவட்டங்களில், மண்ணில் குளிர்ச்சி தன்மை அதிகரித்துள்ளது. இதனால் பயிர்களை நோய் தாக்குகிறது.
எனவே உற்பத்தி குறையும் என, அஞ்சப்படுகிறது. துவரம் பருப்பு, கடலைக்காய், கேழ்வரகு என, மற்ற தானியங்கள், காய்கறிகள் உற்பத்தி குறையலாம்.
வட மாவட்டங்களில் ஜூன், ஜூலையில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து அதிகம் பயிரிடப்பட்டது. மழையால் நிலத்தில் நீர் தேங்குகிறது. பயிர்களை நோய் தாக்கக்கூடும். சிக்கமகளூரு, தாவணகெரே, சித்ரதுர்கா, துமகூரு என பல்வேறு மாவட்டங்களில், கடலைக்காய் பயிரில் காய் விடும் நேரம் இது. ஆனால் மழையால் காய்கள் ஈரமாகி, அழுகுகின்றன.
லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், வெங்காய பயிர்கள் பாழாகின்றன. வரும் நாட்களில் உணவு தானியங்கள், காய்கறிகள் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிக்கும் என, விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

