வெளிநாட்டு மரங்களால் மக்களுக்கு அபாயம்; சிறிய மழைக்கே முறிந்து விழுவதால் பாதிப்பு
வெளிநாட்டு மரங்களால் மக்களுக்கு அபாயம்; சிறிய மழைக்கே முறிந்து விழுவதால் பாதிப்பு
ADDED : ஆக 30, 2024 09:55 PM

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின், வெளிநாட்டு அலங்கார மரங்கள் மீதான மோகம், மக்களின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய மரங்களே அடிக்கடி முறிந்து விழுகின்றன.
'பூங்கா நகர்' என அழைக்கப்படும் பெங்களூரின் அழகை அதிகரிக்கும் நோக்கில், வெளிநாட்டு வகையை சேர்ந்த மரங்களை மாநகராட்சி வளர்த்துள்ளது. நகரின் பெரும்பாலான இடங்களில், 40 முதல் 50 ஆண்டுகளுக்கு முன், இந்த மரங்கள் நடப்பட்டன. மரங்கள் சிறிய காற்று, மழைக்கும் தாக்கு பிடிப்பது இல்லை. திடீரென முறிந்து விழுகின்றன.
ரோட்டில் செல்லும் வாகன பயணியருக்கு, அபாயத்தை ஏற்படுத்துகின்றன. மரம் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்ட உதாரணங்களும் உள்ளன. மழைக்காலத்தில் வாகன பயணியர், பாதசாரிகள் உயிரை கையில் பிடித்து பயணிக்க வேண்டியுள்ளது. இத்தகைய மரங்களுக்கு பதிலாக, ஆயுட்காலம் அதிகம் உள்ள மரக்கன்றுகளை நட வேண்டும் என, சுற்றுச்சூழல் வல்லுனர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
இது குறித்து, சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கூறியதாவது:
மரங்கள் முறிந்து விழுவதை தடுக்க வேண்டும். ரோடுகள் அமைக்க, மெட்ரோ பாதை, சாக்கடை, குடிநீர் குழாய் அமைக்க, மின்சார கேபிள்கள் பொருத்துவது உட்பட மற்ற பணிகளுக்காக அவ்வப்போது ரோடுகளை தோண்டுவதை நிறுத்த வேண்டும்.
மாநகராட்சி வெளிநாட்டு மரங்களுக்கு பதிலாக, அரளி, ஆல், புங்கை, மா, வேப்பிலை, பலா உட்பட நம் நாட்டின் மரக்கன்றுகளை நட வேண்டும். இந்த மரங்களின் வேர், பூமியின் ஆழத்துக்கு இறங்கும். எப்படிப்பட்ட காற்று, மழைக்கும் அசராமல் நுாற்றுக்கணக்கான ஆண்டுகள் நிலைத்து நிற்பவை. இது போன்ற மரங்களை நட்டு, பராமரிக்கலாம்.
வெளிநாட்டு வகையை சேர்ந்த மரங்களின் ஆயுட்காலம், 30 முதல் 40 ஆண்டுகள் மட்டுமே. இவைகள் மிருதுத்தன்மை கொண்டவை. லேசான காற்று, மழையையும் தாக்கு பிடிக்கும் சக்தி இவற்றுக்கு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
.... புல் அவுட்....
மரங்கள் விழுந்ததாக, மக்களிடம் இருந்து புகார் வந்தால், உடனடியாக அங்கு சென்று அகற்றுகிறோம். அபாயமான மரங்களை அப்புறப்படுத்துகிறோம். நகரமயமாவதால் மரங்கள் சேதமடைகின்றன. உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி, உள்நாட்டு மரக்கன்றுகளை நடுவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.
- ப்ரீத்தி கெஹ்லோத், சிறப்பு கமிஷனர், பெங்களூரு மாநகராட்சி வனப்பிரிவு
***