ADDED : ஆக 22, 2024 04:11 AM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பின், அங்கு தர்ஷனும், பவித்ராவும் ஒரு முறை கூட சந்தித்துக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தன் தோழி பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால், சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமியை, 33, கூலிப்படையை ஏவி நடிகர் தர்ஷன் கொலை செய்தார்.
இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.
கொலை வழக்கு குறித்து விசாரிக்கும், விஜயநகர் ஏ.சி.பி., சந்தன் தலைமையிலான போலீசார், அடுத்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். குற்றப்பத்திரிகை தாக்கல் ஆன பின், தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேரும், ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சட்ட போராட்டம்
ஆனால் ஜாமின் கேட்டு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு, பவித்ரா மட்டும் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது.
கொலை வழக்கில் கைதான பின், பவித்ரா மீது தர்ஷன் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சிறையில் கைதிகள் ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இரண்டு மாதங்கள் கடந்தும், தர்ஷனும், பவித்ராவும் ஒரு முறை கூட சந்தித்துக் கொள்ளவில்லை. தன் மனைவி விஜயலட்சுமி மூலம் சட்ட போராட்டம் நடத்தி, இந்த வழக்கில் இருந்து தப்பிக்க தர்ஷன் முயற்சி செய்கிறார்.
மூத்த வக்கீல்
எப்படியும் தன்னை சிறையில் இருந்து, தர்ஷன் வெளியே எடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில், பவித்ரா முதலில் இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு தர்ஷன் மீதான நம்பிக்கை போய் விட்டது.
இதனால் எப்படியாவது சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று, முதல் ஆளாக பவித்ரா மனுத்தாக்கல் செய்துள்ளார். தனது குடும்பத்தினர் உதவியுடன், மூத்த வக்கீல் டாமி செபாஸ்டின் மூலம், ஜாமின் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.
தர்ஷனும், பவித்ராவும் தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.