ADDED : செப் 01, 2024 11:26 PM

பல்லாரி: பல்லாரி சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் முதுகு, கை வலியால் அவதிப்படுகிறார்.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33 கொலை வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நடிகர் தர்ஷனுக்கு, ராஜ உபசாரம் கிடைத்ததால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, பல்லாரி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சென்றதில் இருந்து முதுகு, கை வலியால் அவதிப்படுகிறார்.
நேற்று முன்தினம் தர்ஷனை, அவரது மனைவி விஜயலட்சுமி சந்தித்து பேசினார். அப்போது முதுகு, கை வலி பற்றி கூறி உள்ளார்.
பின், சிறை அதிகாரிகளை சந்தித்த விஜயலட்சுமி, முதுகு, கை வலிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை வைத்து உள்ளார். தர்ஷன் அமர ஒரு நாற்காலி கொடுக்கும்படியும் கேட்டு இருக்கிறார்.
இதுகுறித்து சிறை டி.ஐ.ஜி., சேஷா நேற்று கூறுகையில், '' தர்ஷனுக்கு முதுகு, கை வலிக்கு சிகிச்சை அளிக்கும்படி, அவரது மனைவி கோரிக்கை வைத்து உள்ளார். தர்ஷனின் மருத்துவ அறிக்கைகளை வாங்கி உள்ளோம். அவருக்கு சிறை மருத்துவர் சிகிச்சை அளிப்பார். தேவைப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்,'' என்றார்.
ரேணுகாசாமி கொலையில் கைதாகி சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, தர்ஷனின் உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர் 115 கிலோ இருந்தார். தற்போது உடல் எடை 100 கிலோவாக குறைந்து உள்ளது.