சுமலதா வெற்றிக்கு உதவிய அமைச்சர் உண்மையை உடைத்தார் தர்ஷன்
சுமலதா வெற்றிக்கு உதவிய அமைச்சர் உண்மையை உடைத்தார் தர்ஷன்
ADDED : ஏப் 24, 2024 08:25 AM

மாண்டியா : “கடந்த லோக்சபா தேர்த லில், சுமலதா வெற்றிக்கு அமைச்சர் செலுவராயசாமி உதவினார்,” என, நடிகர் தர்ஷன் உண்மையை உடைத்துள்ளார்.
கன்னட பிரபல நடிகர் தர்ஷன். மாண்டியா எம்.பி.,யும், நடிகையுமான சுமலதாவுக்கு ஆதரவாக உள்ளார். தர்ஷனை தனது இரண்டாவது மகன் என, சுமலதா அடிக்கடி கூறுகிறார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் போட்டியிட சுமலதா 'சீட்' எதிர்பார்த்தார். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் பிரசாரம் செய்யவும், தர்ஷன் தயாராகி வந்தார். ஆனால், மாண்டியா தொகுதி ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இது, சுமலதா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
பா.ஜ.,வில் சீட் கிடைக்காத நிலையில், சுமலதாவை காங்கிரசுக்கு அழைத்து வர, முதல்வர் சித்தராமையா முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. இதற்கு பின்னணியில் அமைச்சர் செலுவராயசாமி இருப்பதாக, சுமலதா கூறி இருந்தார்.
இந்த நிலையில், மாண்டியா காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமணே கவுடாவை ஆதரித்து, தர்ஷன் பிரசாரம் செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு, மலவள்ளியில் அவர் பிரசாரம் செய்தார்.
விவசாய அமைச்சர் செலுவராயசாமி எம்.எல்.ஏ.,வாக உள்ள நாகமங்களாவில், வெங்கட ரமணேகவுடாவை ஆதரித்து நடிகர் தர்ஷன் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய வரவில்லை. தனி நபருக்காக பிரசாரம் செய்கிறேன். கடந்த தேர்தலில் சுமலதா வெற்றிக்கு, அமைச்சர் செலுவராயசாமி உதவினார். அந்த நன்றிக்கடனை அடைக்க, இப்போது பிரசாரம் செய்கிறேன்,'' என்றார்.
மலவள்ளியில் பிரசாரம் செய்தபோது, “காங்கிரஸ் எம்.எல்.ஏ., நரேந்திர சாமி, சுமலதா வெற்றிக்கு உதவினார்,” என, தர்ஷன் கூறி இருந்தார்.
இதன்மூலம், 2019ல் கூட்டணியில் இருந்த ம.ஜ.த., கட்சியின் நிகில் குமாரசாமிக்கு எதிராக காங்கிரசார், 'உள்ளடி' வேலை பார்த்ததை தற்போது தர்ஷன் அம்பலப்படுத்தி உள்ளார்.

