ADDED : ஆக 15, 2024 04:44 AM

பெங்களூரு : சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் தர்ஷன், பவித்ரா உட்பட 13 பேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலும்; நான்கு பேர் துமகூரு மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் நீதிமன்றக் காவல் நேற்று நிறைவு பெற்றது.
காணொளி காட்சி வாயிலாக 17 பேரும் நேற்று, பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நீதிபதி விஸ்வநாத் கவுடர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பிரசன்னகுமார் 17 பேரின், நீதிமன்றக் காவலை மேலும் நீட்டிக்க மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான தொழில்நுட்ப ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. பிரிவு 164ன் கீழ் நீதிபதி முன் மேலும் சிலர் ரகசிய வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு நடக்கிறது.
கைதான அனைவருக்கும் சமூகத்தில் செல்வாக்கு செலுத்தும் நபர்களுடன் பழக்கம் உள்ளது. அவர்கள் வெளியே வந்தால், சாட்சிகளை மிரட்டி அழிக்கும் வாய்ப்பு உள்ளது' என கூறப்பட்டு உள்ளது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தர்ஷன் உட்பட 17 பேரின் நீதிமன்றக் காவலை 28ம் தேதி வரை, நீடித்து உத்தரவிட்டார். இதற்கு முன்பும் இரண்டு முறை இவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் நேற்று காலை நடிகர்கள் சிக்கண்ணா, தன்வீர் கவுடா, அபிஷேக் அம்பரிஷ் ஆகியோர், சிறைக்கு சென்று தர்ஷனை சந்தித்து பேசினர்.