ADDED : மே 03, 2024 10:59 PM

குடகு : சாப்பிட வர மறுத்த மாமியாரை மொபைல் போனால் அடித்துக் கொன்று, தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மருமகள் கைது செய்யப்பட்டார்.
குடகு மடிகேரி மரகோடி கிராமத்தில் வசித்தவர் பூவம்மா, 72; ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது மகன் பிரசன்னா, 30. இவரது மனைவி பிந்து, 26. கடந்த மாதம் 15ம் தேதி, பிரசன்னா வெளியே சென்று இருந்தார். அவருக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பிந்து பேசினார்.
''உங்கள் அம்மா தவறி விழுந்துவிட்டார். தலையில் அடிபட்டு உள்ளது. உடனடியாக வீட்டிற்கு வாருங்கள்,'' என்று கூறினார். இதனால் பிரசன்னாவும் வீட்டிற்கு வந்தார்.
உயிருக்கு போராடிய தாயை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவர் இறந்துவிட்டார். மடிகேரி ரூரல் போலீசிலும், தாய் தவறி விழுந்து இறந்ததாக புகார் செய்தார்.
பூவம்மாவுக்கு அடிக்கடி தலைசுற்றல் ஏற்பட்டு கீழே விழுவார். இதனால் அப்படி விழுந்து இறந்து இருப்பார் என்று குடும்பத்தினர் நினைத்தனர்.
இந்நிலையில் பூவம்மா கடைசியாக கட்டி இருந்த சேலை, அவரது படுக்கை அறையில் ரத்தக்கறை படிந்து இருந்ததை பிரசன்னா கவனித்தார்.
இதுகுறித்து கடந்த சில தினங்களாக மனைவியிடம் கேட்டுள்ளார். முதலில் மழுப்பலாக பதில் அளித்த பிந்து, நேற்று முன்தினம் பூவம்மாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். இதனால் மனைவியை, போலீஸ் நிலையத்தில் பிரசன்னா ஒப்படைத்தார். அவர் கைது செய்யப்பட்டார்.
மாமியார், மருமகள் இடையில் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். கடந்த 15ம் தேதி சாப்பிட வரும்படி பூவம்மாவை, பிந்து அழைத்தார். ஆனால் சாப்பிட வர பூவம்மா மறுத்தார்.
இதனால் மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. கோபத்தில் தன் கையில் இருந்த மொபைல் போனால், மாமியார் தலையில், மருமகள் அடித்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் பூவம்மா கட்டிலில் சரிந்து விழுந்தார். இதை கண்டு கொள்ளாமல் பிந்து அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, பூவம்மா உயிருக்கு போராடியதை கண்டு, அதிர்ச்சி அடைந்தார்.
தரையில் சிந்திய ரத்தத்தை துடைத்துள்ளார். ரத்தக்கறை படிந்த பெட்ஷீட் மீது, மேலும் சில துணிகளை போட்டு மறைத்து, தடயத்தை அழிக்க முயன்றார்.
கொலை பழியை மறைக்க, தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது.