மழையுடன் விடியல்: சாலைகளில் வெள்ளம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
மழையுடன் விடியல்: சாலைகளில் வெள்ளம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ADDED : ஜூலை 24, 2024 08:28 PM

புதுடில்லி:தலைநகர் டில்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலையிலேயே மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் ஓடியதால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பள்ளி மாணவ - மாணவியர் கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி சென்றனர்.
புதுடில்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையிலேயே மழை கொட்டியது. அதேபோல், அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.
டில்லி சாலைகளில் வெள்ளம் ஓடியது. இதனால், பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. அதேபோல் சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
நிகம்போத் காட் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. ஹரியானா ராணி பாக் மைத்ரி பவனில் மிகப்பழமையான பெரிய ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வரும் 28ம் தேதி வரை மழை தொடரும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், டில்லிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டில்லியில் நேற்று வெப்பநிலை குறைந்த பட்சமாக 24.8, அதிகபட்சமாக 34 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 100 சதவீதமாக இருந்தது.
இது, இந்தப் பருவத்தின் இயல்பை விட இரண்டரை டிகிரி செல்ஷியஸ் குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ராஜஸ்தான்
அண்டை மாநிலமான ராஜஸ்தானின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், சர்மதுராவில் 12 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. பகதூர்பூர் - 10 செ.மீ.,ராஜ்கர் - 9 மி.மீ., சாப்ரா - 8 செ.மீ.,  ஷாஹ்புரா - 7 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது.
ஜெய்ப்பூர், கோட்டா, பரத்பூர், அஜ்மீர், உதய்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-ஹிமாச்சல பிரதேசம்
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் 28ம் தேதி வரை கனமழை பெய்யும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன் தினம் மாலையில் இருந்து நேற்று காலை 8:30 மணி வரை பைஜ்நாத் - 85 மி.மீ., பாலம்பூர் - 25.2, ஜோகிந்தர் நகர் - 18, தர்மஸ்தாலா - 10.4, போண்டா சாஹிப் - 7.6, சைஞ்ஜ் மற்றும் கஹு - தலா 7.5, கசவுலி - 7.4 மற்றும் சிம்லா - 5.6 மி.மீ., மழை பெய்துள்ளது.
ஹிமாச்சலில் இதுவரை மழைக்கு மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 27 முதல் இங்கு பருவமழை கொட்டுகிறது. இதுவரை 364 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில் அரசு தெரிவித்துள்ளது.

