ADDED : ஏப் 14, 2024 06:54 AM
தட்சிண கன்னடா: கடபாவின் குமாரதாரா ஆற்றில் இரண்டு வயது முதலை ஒன்று இறந்து, கரை ஒதுங்கியது.
தட்சிண கன்னடா மாவட்டம், கடபாவில் குமாரதாரா ஆறு ஓடுகிறது. பஞ்ச - கடபா குறுக்கே கட்டப்பட்டு உள்ள புலிகுக்கு பாலத்தின் கீழ் பகுதியில், முதலை ஒன்று இறந்து மிதந்ததை, நேற்று முன்தினம் அப்பகுதியினர் பார்த்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'முதலைகளின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள். ஆனால், இரண்டு வயதே ஆன முதலை இறந்து கிடப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. ஆற்றில் நீர்வரத்து குறைந்து, வெயிலின் தாக்கத்தால் இறந்ததா அல்லது மற்றொரு முதலையுடன் ஏற்பட்ட மோதலில் இறந்ததா என்பது தெரியவில்லை' என்றனர்.
இதை மறுத்த ஒரு வனத்துறை அதிகாரி கூறியதாவது:
முதலையின் இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இறந்த முதலையின் அருகில் மீன்களை பார்க்க முடிந்தது. அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வேறு முதலையுடன் சண்டையிட்டிருந்தால், அதன் உடலில் காயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் காயமும் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, இறந்ததற்கான காரணம் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

