ADDED : மார் 04, 2025 08:59 PM
பெங்களூரு : அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, அந்தந்த அலுவலகங்களில் ஓய்வறை ஏற்படுத்தும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும், அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர்கள், அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். பணி நேரத்தில் சோர்வடையும் போது, ஓய்வெடுக்க தனியிடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தங்களுக்கு ஓய்வறை வேண்டும் என, பெண் ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கின்றனர்.
இதை ஏற்றுக்கொண்டுள்ள மாநில அரசு, பெண் ஊழியர்களுக்கு ஓய்வறை ஏற்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தனி ஓய்வறை இல்லை என்பது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில், பெண் ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி ஓய்வறை ஏற்படுத்தித்தர வேண்டும். வசதி செய்யப்பட்டது பற்றி, வரும் 10ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.