மீண்டும் 'இண்டெக்சேஷன்' வாய்ப்பு திருத்தம் கொண்டு வர முடிவு
மீண்டும் 'இண்டெக்சேஷன்' வாய்ப்பு திருத்தம் கொண்டு வர முடிவு
ADDED : ஆக 07, 2024 03:36 AM

புதுடில்லி : நீண்ட கால ஆதாய வரி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த, 'இண்டெக்சேஷன்' வாய்ப்பு நீக்கத்தில் திருத்தத்தை கொண்டு வர இருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பில், இண்டெக்சேஷன் பயன் நீக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். நீண்ட கால மூலதன ஆதாய வரியை எளிமைப்படுத்தும் விதமாக, இதை மேற்கொள்வதாக கூறியிருந்தார்.
ஆனால் இண்டெக்சேஷன் பயன் நீக்கப்பட்டதற்கு, பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, இந்த அறிவிப்பை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று லோக்சபாவில் இதற்கான முன்மொழிவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வர உள்ளார்.
இதன்படி, தற்போது 2024, ஜுலை 23 வரை சொத்து விற்பனை மூலம் கிடைத்த லாபத்திற்கு நீண்டகால ஆதாய வரி விகிதத்தை கணக்கிட, இண்டெக்சேஷன் முறையை தேர்வு செய்யாமல், 12.5 சதவீதம் வரி செலுத்தலாம். அல்லது இண்டெக்சேஷன் முறையை தேர்வு செய்வோர், மூலதன ஆதாய வரியாக 20 சதவீதம் செலுத்த வாய்ப்பு வழங்கப்படும். இரண்டில் ஏதேனும் ஒரு முறையில் வரி செலுத்த வாய்ப்பு வழங்கப்படும்.