சாலை விதிமுறை மீறலுக்கு அபராதத்தை அதிகரிக்க முடிவு
சாலை விதிமுறை மீறலுக்கு அபராதத்தை அதிகரிக்க முடிவு
ADDED : செப் 11, 2024 09:42 PM
புதுடில்லி:சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 50 சதவீதம் அதிகரிக்க டில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, டில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியதாவது: மோட்டார் வாகனச் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ், சில குறிப்பிட்ட விதிமுறை மீறல்களுக்கு அபராதத் தொகையை 50 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தின் உரிமையாளர் ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை வாகனம் ஓட்ட அனுமதித்தல், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ பாதிக்கப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு அபராதத் தொகையை 50 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு தலைமை போலீஸ்காரர் மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கும், டில்லி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் உதவிப் போக்குவரத்து ஆய்வாளர்களுக்கும், அபராதத் தொகையை அதிகரித்து வசூலிக்க அங்கீகாரம் வழங்கப்படும். அரசின் இந்த முடிவுக்கு ஒப்புதல் கேட்டு துணைநிலை கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.