மைசூரு சிறை கைதிகளுக்கு 'ஹாட்பாக்ஸ்' வழங்க முடிவு
மைசூரு சிறை கைதிகளுக்கு 'ஹாட்பாக்ஸ்' வழங்க முடிவு
ADDED : ஆக 28, 2024 02:27 AM

மைசூரு, மைசூரு மத்திய சிறையில் உள்ள கைதிகள் சூடான உணவு சாப்பிடும் வகையில், 'ஹாட் பாக்ஸ்'கள் வழங்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
கர்நாடக சிறையில் உள்ள கைதிகளுக்கு தினமும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. காலை உணவு 7:00 மணிக்கும், மதிய உணவு காலை 11:30 மணிக்கும், இரவு உணவு மாலை 6:30 மணிக்கும் வழங்கப்படும்.
முன்கூட்டியே வழங்கப்படும் உணவுகளை, தங்கள் அறையில் கைதிகள் பிளேட்களால் மூடி வைத்துக் கொள்வர். மழை காலங்களில் மாலையில் வழங்கப்படும் உணவு, இரவு உண்ணும்போது குளிர்ந்துவிடும்.
இதைத் தவிர்க்கும் வகையில், மாலை நேரத்தில் கைதிகளுக்கு ஹாட் பாக்சில் உணவு வழங்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, சிறையின் முதன்மை சூப்பிரண்ட் ரமேஷ் கூறியதாவது:
தற்போது சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 860 பேர் உள்ளனர்.
சிறை விதிமுறைகளின்படி, இரவு நெருங்குவதற்கு முன், கைதிகள் அவரவர் அறைகளுக்கு சென்றுவிட வேண்டும்.
இதனால், அவர்களுக்கு மாலையே உணவு வழங்கப்பட்டு விடும். இதனால் உடல் உபாதை ஏற்படுவதை தவிர்க்க, 'ஹாட்பாக்ஸ்' வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிளாக்கிலும், 15 முதல் 30 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். எனவே, 10, 20, 30 லிட்டர் உள்ள 24 ஹாட்பாக்ஸ்கள் வாங்க 'டெண்டர்' விடுக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஹாட்பாக்சிலும் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு வைக்கப்படும். பசி எடுக்கும் போது, ஹாட்பாக்சில் இருந்து கைதிகள் எடுத்து சாப்பிடலாம். இதுபோன்ற திட்டம் ஏற்கனவே, மடிகேரி சிறையில் அமலில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.