ADDED : ஆக 08, 2024 06:04 AM
பெங்களூரு: மக்களின் நலனை மனதில் கொண்டு, 'உணவு பரிசோதனை ஆய்வகம்' அமைக்க, சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. பொது மக்கள் தாங்கள் வாங்கும் உணவு பொருட்களை, இங்கு பரிசோதிக்கலாம்.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பல்வேறு இடங்களில் கலப்படமான உணவு தானியங்கள், காலாவதியான உணவு பொருட்கள் விற்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உணவு பொருட்களில் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்துகின்றனர். இது, உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்நாடகாவில் ஏற்கனவே, கெமிக்கல் நிறங்கள் பயன்படுத்திய கோபி மஞ்சூரியன், கபாப் உட்பட உணவு தயாரிக்க அரசு தடை விதித்துள்ளது. ஆனால், சில இடங்களில் இத்தகைய உணவு பொருட்கள் விற்பதாக, தெரிய வந்துள்ளது. மக்களின் நலனுக்காக, 'புட் டெஸ்டிங் லேப்' அமைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக பெங்களூரில், 'புட் டெஸ்டிங் லேப்' அமைக்கப்படும். மக்கள் தாங்கள் வாங்கும் காய்கறிகள், இறைச்சி, உணவு தானியங்களின் தரம் குறித்து, சந்தேகம் இருந்தால் இந்த ஆய்வகத்தில் பரிசோதித்து, உறுதி செய்து கொள்ளலாம்.
சைவம், அசைவ உணவு விற்பனை செய்யும் ஹோட்டல்கள், ரெஸ்டாரென்டுகள் உட்பட உணவு விற்பனை செய்வோர், துாய்மை, சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். இது குறித்து, அவரவர் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.