ADDED : மே 27, 2024 03:42 PM

லக்னோ: அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக, ராகுல் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் மீதான விசாரணை ஜூன் 7ம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த 2018ல் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி., ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி அவதுாறு கருத்து தெரிவித்தார். பா.ஜ., தலைவர் விஜய் மிஸ்ரா ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சுல்தான்பூரில் உள்ள எம்.பி, எம்எல்ஏ.,க்களுக்கான மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பிஸியாக இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் அவகாசம் வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், ராகுல் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் மீதான விசாரணை ஜூன் 7ம் தேதி நடைபெறும் என நீதிபதி சுபம் வர்மா தெரிவித்துள்ளார். மனுதாரரின் வழக்கறிஞர், ராகுல் விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் ஓடுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் ராகுலுக்கு எதிராக, வாரன்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது. பின்னர், பிப்ரவரி 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் ஜாமின் பெற்றார்.

