சித்தராமையா மீது மானநஷ்ட வழக்கு சமூக ஆர்வலர் ஆபிரகாம் ஆவேசம்
சித்தராமையா மீது மானநஷ்ட வழக்கு சமூக ஆர்வலர் ஆபிரகாம் ஆவேசம்
ADDED : ஆக 22, 2024 04:17 AM

பெங்களூரு: “முதல்வர் சித்தராமையா மீது, மான நஷ்ட வழக்கு தொடர்வேன். அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவேன்,” என, சமூக ஆர்வலர் ஆபிரகாம் சவால் விடுத்தார்.
சமூக ஆர்வலர் ஆபிரகாம், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். இதற்கு முன்பு கர்நாடக முதல்வர்களாக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி, தரம்சிங், எடியூரப்பா ஆகியோர் மீதும் ஊழல் வழக்கு தொடர்ந்தவர் இவர். இப்போது முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.
'மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில், சட்டவிரோதமாக 14 வீட்டுமனைகள் பெறப்பட்டுள்ளன.
இந்த மனைகள் மைசூரின் பிரபலமான விஜயநகரில் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அரசு கருவூலத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, நடப்பாண்டு ஜூலை 18ல், லோக் ஆயுக்தாவில் ஆபிரகாம் புகார் அளித்தார்.
பிளாக்மெயிலர்
புகாரில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, இவர்களின் மகனும், எம்.எல்.ஏ.,வுமான யதீந்திரா, மைசூரு நகர ஆணைய கமிஷனர் நடேஷ், மூடா தலைவர் ராஜிவ் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்கெதிராக புகார் அளித்த ஆபிரகாமை பிளாக்மெயிலர் என, விமர்சித்தார்.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று ஆபிரகாம் அளித்த பேட்டி:
எனக்கும், முதல்வர் சித்தராமையா இடையிலான சட்டப் போராட்டம், மூடா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன். அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவேன்.
கெசரே கிராமம் 2001ல் இருந்து செயல்பாட்டில் இல்லை என்கின்றனர். 1997ல் தேவனுாரு மூன்றாவது ஸ்டேஜில், லே அவுட் அமைக்க நிலத்தை மூடா கையகப்படுத்தியது. அன்று முதல் நிலம் மூடா வசம் உள்ளது. இந்த நிலத்தை முதல்வர் சித்தராமையாவின் குடும்பத்தினர், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, மறு அறிவிப்பு செய்து கொண்டனர்.
இந்த நிலத்தை 2004ல் சித்தராமையாவின் மைத்துனர் வாங்கி, சகோதரிக்கு சீராக கொடுத்ததாக கூறுகின்றனர். 2004ல் கெசரே கிராமமே செயல்பாட்டில் இல்லை. இது, மூடாவின் எல்லையில் இருந்த தேவனுாரு மூன்றாவது ஸ்டேஜில் இருந்தது. இந்த நிலத்தை முதல்வரின் மைத்துனர் யாரிடம் இருந்து வாங்கினார்.
இந்த முறைகேடு தொடர்பாக, என் புகாருக்கு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என, நம்புகிறேன். கவர்னரை சந்திக்க ஆகஸ்ட் 19ல், எனக்கு அனுமதி கிடைத்தது. அவரிடம் மூடா முறைகேடு தொடர்பாக விவரித்தேன்.
வேண்டுகோள்
முதல்வரின் குடும்பத்தினர் நிலம் வாங்கியதாக கூறப்பட்ட நேரத்தில், அங்கு 3.16 ஏக்கர் விவசாய நிலம் இருக்கவில்லை. ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட நிலத்தை, நில பரிமாற்றம் செய்யும்படி, மாவட்ட கலெக்டரிடம் எப்படி வேண்டுகோள் விடுக்க முடியும் என்பதை, கவர்னரிடம் விளக்கினேன்.
லோக் ஆயுக்தாவிடம் சொத்து விபரங்களை தாக்கல் செய்தபோது, நில ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை. சித்தராமையா எந்த தவறும் செய்யவில்லை என்றால், நிலத்தை ஏன் மூடி மறைக்க வேண்டும்?
என்னை முதல்வர் சித்தராமையா, பிளாக்மெயிலர் என, விமர்சித்துள்ளார். அவர் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும். ஏன் என்றால் என் மீது எந்த வழக்கும் இல்லை. என்னை விமர்சித்தது தொடர்பாக, அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்துவேன்.
இதற்கு முன்பு எந்த முதல்வரும், என்னை பற்றி இப்படி பேசியது இல்லை. நான் வழக்குப் பதிவு செய்யும் ஐந்தாவது முதல்வர் இவர். இவரது பேச்சு விரக்தியின் வெளிப்பாடு.
என்னுடன் விவாதிக்க வரும்படி, சவால் விடுத்துள்ளேன். இதுவரை 15 அமைச்சர்கள் ஊடகத்தினர் சந்திப்பு நடத்தினர். அவர்களில் ஒருவராவது என் கேள்விக்கு பதில் அளித்தனரா?
இவ்வாறு அவர் கூறினார்.