ADDED : ஜூன் 21, 2024 12:58 AM
புதுடில்லி, பண மோசடி வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி மதுபான கொள்கையில் நடந்த பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மார்ச் 21ல் கைது செய்யப்பட்டார்.
லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1 வரை அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி, மே 10ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமின் முடிவடைந்ததும், ஜூன் 2ல், டில்லி திஹார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார்.
இதற்கிடையே, பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, சிறப்பு நீதிபதி நியய் பிந்து முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நியய் பிந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 1 லட்சம் ரூபாய் பிணையில், ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை தரப்பு, கெஜ்ரிவாலின் ஜாமின் உத்தரவை, 48 மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கும்படி கோரிக்கை விடுத்தது. இதை சிறப்பு நீதிபதி நியய் பிந்து நிராகரித்தார்.
இதற்கிடையே, திஹார் சிறையில் இருந்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விடுதலையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.