தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து டில்லி அரசு மேல்முறையீடு
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து டில்லி அரசு மேல்முறையீடு
ADDED : மே 10, 2024 11:08 PM
புதுடில்லி:பணி நேரத்தில் கழிவு நீர் கால்வாயில் விழுந்து மரணம் அடைந்த துப்புரவுத் தொழிலாளி மனைவிக்கு 30 லட்சம் ரூபாய் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டில்லி அரசு, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தலைநகர் டில்லியில், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, கழிவுநீர் கால்வாயில் இறங்கி வேலை செய்த துப்புரவுத் தொழிலாளி விஷ வாயுவை சுவாசித்து மூச்சுத் திணறி மரணம் அடைந்தார்.
இதையடுத்து, மரணம் அடைந்த தொழிலாளி மனைவிக்கு டில்லி அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில், நாடு முழுதும் கையால் துப்புரவுத் தொழில் செய்வதை ஒழிக்கவும், கையால் துப்புரவுப் பணி செய்யும் போது மரணம் அடைந்தால், இழப்பீடாக 30 லட்சம் ரூபாய் வழங்கவும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, டில்லியில் 2018ம் ஆண்டு பணி நேரத்தில் விஷவாயு தாக்கி பலியான தொழிலாளியின் மனைவி, தன் கணவர் மரணம் அடைந்ததற்கு இழப்பீடாக டில்லி அரசு 10 லட்சம் ரூபாய் வழங்கியது.
உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி தனக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 2018ல் மரணம் அடைந்த துப்புரவுத் தொழிலாளி மனைவிக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டில்லி அரசு சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாதவது:
கடந்த 2018ல் இறந்த துப்புரவுத் தொழிலாளி மனைவிக்கு அப்போதைய உத்தரவுப்படி அதே மாதத்தில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. இழப்பீட்டுத் தொகையை 30 லட்சமாக உயர்த்தி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு அவருக்குப் பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு துப்புரவுத் தொழிலாளி மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைத்தது.