கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை உள்துறைக்கு டில்லி கவர்னர் பரிந்துரை
கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை உள்துறைக்கு டில்லி கவர்னர் பரிந்துரை
ADDED : மே 07, 2024 01:39 AM

புதுடில்லி, தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு இயக்கமான, 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' இயக்கத்திடம் இருந்த பல கோடி ரூபாய் நன்கொடை பெற்றது தொடர்பாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை என்.ஐ.ஏ., விசாரிக்க டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா பரிந்துரைத்துள்ளார்.
பஞ்சாபின் ஒரு பகுதியை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் எனும் தனி நாடாக அறிவிக்கக்கோரி காலிஸ்தான் தீவிரவாதிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பிரிவினைவாதம் பேசும் இந்த தீவிரவாதிகளை மத்திய அரசு ஒடுக்கி வருகிறது. தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவும், நிதியும் அளிக்க, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' என்ற அமைப்பு 2007ல் துவங்கப்பட்டது.
குர்பத்வந்த் பன்னுன் என்பவர் இந்த அமைப்பின் தலைவராக உள்ளார்.
இந்த அமைப்பு, நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் ஆதரவாளர்களான ஜகதிஷ் சிங், மன்ஜித் சிங், தேவேந்தர் பால் புல்லார் ஆகியோர் மத்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக, குர்பத்வந்த் பன்னுனுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்ததாகவும், இதற்காக பிரதிபலனாக 2014 முதல் 2022 வரை, 133 கோடி ரூபாயை ஆம் ஆத்மி கட்சிக்கு கெஜ்ரிவால் நன்கொடையாக பெற்றதாக உலக ஹிந்து கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஆஷு மோங்கியா ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையே, தன் ஆதரவாளர்கள் மூன்று பேரை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் மீறிவிட்டதாக குர்பத்வந்த் பன்னுன் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரங்கள் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள, பென் டிரைவில் குற்றச் சாட்டை நிரூபிக்கும் வீடியோ ஆதாரங்கள் உள்ள தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக இருந்தபோது, தேவேந்தர் பால் புல்லார் உள்ளிட்ட மூவருக்கு பொது மன்னிப்பு அளிக்க கோரி கெஜ்ரிவால் எழுதிய கடிதம் குறித்தும் கவர்னர் தன் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.