பிரதமர் மோடிக்கு எதிரான மனு டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி
பிரதமர் மோடிக்கு எதிரான மனு டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : மே 14, 2024 01:28 AM
புதுடில்லி, தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
கடந்த மாதம் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடந்த பிரசாரங்களில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வினர் வெறுப்புணர்வு துாண்டும் வகையில் பேசியதாக தேர்தல் கமிஷனில் பல்வேறு தரப்பினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வலியுறுத்தி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதை கடந்த 10ம் தேதி விசாரித்த நீதிமன்றம், உரிய பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கட்சிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களிடம் இருந்து பதில் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி இது தொடர்பாக அனைத்து கட்சியினருக்கும் விரிவான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவித்தார்.
தேர்தல் கமிஷனின் பதிலை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 'மனுதாரரின் புகாரை சட்டத்தின்படி சுயாதீனமாக மதிப்பிடுவதற்கு இந்திய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது' எனக் கூறியதுடன், இது தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு அளித்த உத்தரவை குறிப்பிட்டு, தற்போதைய மனுவை தள்ளுபடி செய்தது.

