டில்லி மாடல்! பீஹார் சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ., வியூகம்: வீடு வீடாக செல்ல தயாராகும் தலைவர்கள்
டில்லி மாடல்! பீஹார் சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ., வியூகம்: வீடு வீடாக செல்ல தயாராகும் தலைவர்கள்
ADDED : மார் 08, 2025 11:49 PM

டில்லியில் மிக நுட்பமான வியூகங்களை தெளிவாக வகுத்து, அதற்கேற்ப சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி, இறுதியில் ஆட்சியை பிடித்ததைப் போலவே, இன்னும் சில மாதங்களில் நடைபெறப்போகும் பீஹார் தேர்தலிலும் அட்டகாசமான வெற்றியை பெற்றுவிட வேண்டுமென்று முடிவு செய்து, அதற்கான ஆலோசனைகள், பா.ஜ., மேலிடத்தில் துவங்கியுள்ளன.
போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட டில்லி சட்டசபை தேர்தலில், 26 ஆண்டுகளுக்கு பின் பெற்றுள்ள வெற்றி, பா.ஜ., மேலிட தலைவர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, பீஹார் சட்டசபை தேர்தலையும், அதே பாணியில் சந்திக்க வேண்டும் என்று, முடிவுசெய்து, இதற்கான ஆலோசனைகளும், வியூகங்களும், டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில், தீவிரம் பெறத் துவங்கியுள்ளன.
பீஹாரின் முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை பா.ஜ., மேலிடம் வகுத்துள்ளது.
இதன்படி, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள், பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள் அனைவரும், பீஹாருக்கு படை எடுக்க வேண்டும்.
பிரசாரம்
மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பயணம் மேற்கொண்டு, வாக்காளர்களை நேரில் சந்தித்து, அவர்களுடனான இணைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள குடிசைப்பகுதிகளுக்கு, தலைவர்கள் நேரில் சென்று தங்கி அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டு, பல நாட்கள் அவர்களுடனே தங்கியிருந்து, பணிகளை மேற்கொண்டதைப்போலவே, பீஹாரிலும், பின்தங்கிய குக்கிராமங்களுக்கு பா.ஜ., தலைவர்கள் சென்று, அங்கு இரவு நேரங்களில் தங்கி, மக்களுடன் உரையாட வேண்டும்.
தவிர, வாக்காளர்களிடம் நேரடியாக சென்று பிரசாரம் செய்யவோ, ஓட்டு சேகரிக்கவோ கூடாது.
மாறாக, கீழ்மட்ட அளவில் சென்று, அவர்களது பிரச்சனை என்ன, அவர்களுடைய தேவை என்ன என்பதை அறிந்து, அதை தீர்த்து வைத்து, அவர்களது தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு, அதன்பிறகே பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்க வேண்டும்.
இந்த நடைமுறையைதான், நடந்து முடிந்த டில்லி தேர்தலில், பா.ஜ., நிர்வாகிகள் கடைப்பிடித்தனர். அதற்கு முன் நடந்த ஹரியானா மற்றும் மஹாராஷ்டிர சட்டசபை தேர்தலிலும் கடைப்பிடித்து, பா.ஜ., தனிப்பெரும் வெற்றியை பெற்றது.
இதே பாணியில்தான், தேர்தல் பிரசாரம் மற்றும் ஓட்டு சேகரிப்பு ஆகியவை, ஒருவழிப் பாதையாக இல்லாமல், இருவழிப் பாதையாக, பீஹாரிலும் அமைந்திட வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கூறப்பட்டுள்ளது.
ஒற்றுமை
நாடு முழுதும் இருக்கக்கூடிய, பா.ஜ.,வின் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் பீஹார் தேர்தல் பணிகளில் களம் இறக்க வேண்டும்.
குறிப்பாக, ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியே சந்தித்து பேசுவதற்கு ஏற்ப, பூகோள ரீதியாக, சமூக ரீதியாக, மொழி மற்றும் இன ரீதியாக ஒற்றுமை கொண்ட அந்தந்த பகுதிகளுக்கு தேர்தல் பணிக்கு அமர்த்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
- நமது டில்லி நிருபர் -