தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ டில்லி உஷ்

டில்லி உஷ்

டில்லி உஷ்


ADDED : மே 02, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 03:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜய்க்கு வெற்றி!

தமிழகம் மட்டுமன்றி, தமிழக சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என, நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், டில்லி ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில், தமிழகம் தொடர்பான ஒரு செய்தி கிசுகிசுக்கப்படுகிறது. அது, கரூர் சம்பவம் தொடர்பாக தான்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கடந்தாண்டு செப்டம்பரில் கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில், 41 பேர் இறந்தனர். ‘இதற்கு விஜய் தான் காரணம்’ என, தி.மு.க., தரப்பு கூறியது. இது தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

இதை எதிர்த்து, த.வெ.க., உச்ச நீதிமன்றம் சென்றது. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழு அமைக்கவும் ஆணை பிறப்பித்தது. இந்த குழுவில், தமிழக கேடரைச் சார்ந்த, ஆனால் தமிழரல்லாத இரு ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் நியமித்தது உச்ச நீதிமன்றம். சம்பவ இடத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர்.

மூன்று முறை சி.பி.ஐ., விசாரணைக்கு டில்லியில் ஆஜரானார் விஜய். அதே போல, த.வெ.க.,வின் மற்ற தலைவர்களையும் சி.பி.ஐ., விசாரித்தது. தி.மு.க.,வின் செந்தில் பாலாஜியும் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் பூர்வாங்க வேலைகள் முடிந்து விட்டன.

இது குறித்து, டில்லி ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் பேசப்படுவது இது தான். சி.பி.ஐ., முதல் நிலை முடிவு எடுத்து விட்டதாம். இதன்படி, ‘விஜய் குற்றமற்றவர்; இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார்’ என, சி.பி.ஐ., முடிவிற்கு வந்துள்ளதாம்.

‘கரூருக்கு விஜய் சென்ற போது, அங்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. தவிர, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில், அளவுக்கு அதிகமானோர் கூடிய போது, காவல் துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

‘அங்கு விஜயை வர விடாமல் போலீஸ் தடுத்திருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை. எனவே, இந்த இறப்புகளுக்கு முக்கிய காரணமே, போதிய ஏற்பாடுகள் செய்யாதது தான்’ என, முதல் கட்ட முடிவிற்கு சி.பி.ஐ., வந்துள்ளதாம்.

சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள காவல் துறை அதிகாரிகள், தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் திரும்பிய பின், சி.பி.ஐ., தன் முதல் கட்ட அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என, சொல்லப்படுகிறது. ‘விஜய் காரணமல்ல என்றால், விபத்திற்கு யார் பொறுப்பு என்பது குறித்து, விரிவான அறிக்கையில் சி.பி.ஐ., தெரிவிக்கும்’ என்றும் கூறப்படுகிறது.

***

எஸ்.பி.ஜி.,க்கு நன்றி

சொன்ன பிரதமர்

மேற்கு வங்க தேர்தலின் இரண்டாவது மற்றும் கடைசி பிரசாரத்தை முடித்து, சிக்கிம் சென்ற பிரதமர் மோடி, இரு நாட்கள் அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், தன் தொகுதியான வாரணாசிக்கு சென்றார். அதன்பின், ஏப்., 29 இரவு டில்லி திரும்பினார். நான்கு நாட்கள் டில்லிக்கு வெளியே தங்கினார் பிரதமர்.

பிரதமருக்கு எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கிறது. டில்லிக்கு வெளியே பிரதமர் தங்கும் போது, பாதுகாப்பு அளிப்பதில் பல பிரச்னைகள் உள்ளன. அதுவும், தேர்தல் நேரத்தில், ‘ரோடு ஷோ’ நடத்தும்போதெல்லாம், எஸ்.பி.ஜி.,யின் பாடு, படு திண்டாட்டம். இந்த நான்கு நாட்களிலும், எஸ்.பி.ஜி.,யின் வேலை மிகவும் கடினமாக இருந்ததாம்.

டில்லி திரும்பிய உடன், பிரதமர் மோடி செய்த ஒரு விஷயம், டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பாராட்டப்படுகிறது. எஸ்.பி.ஜி.,யின் தலைமை அலுவலகம், டில்லியில் உள்ள துவாரகாவில் அமைந்துள்ளது. இங்கு, எஸ்.பி.ஜி.,யில் பணிபுரியும், டிரைவர் உள்ளிட்ட, 4,500 பேருக்கும் பிரதமர் விருந்து அளித்தாராம்.

அப்போது, ‘என்னை பாதுகாப்பதில், நீங்கள் எவ்வளவு பிரச்னைகளை சந்திக்கிறீர்கள் என்பது தெரியும். எனக்கு அரணாக இருந்து, நீங்கள் பாதுகாத்ததற்கு நன்றி. ஆண்டவனுக்கும் நன்றி’ என, பிரதமர் பேசினாராம். இந்த விருந்தில் பங்கேற்ற அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. இதுவரை, எந்த ஒரு பிரதமரும் எஸ்.பி.ஜி.,க்கு இப்படி விருந்து அளித்து, நன்றி தெரிவித்தது கிடையாதாம்.

இவர்களுடன், பிரதமரின் உதவியாளர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர். பிரதமருக்கு ஐந்து தனிப்பட்ட உதவியாளர்கள் உள்ளனர். பிரதமர் எங்கு சென்றாலும், இவர்களும் உடன் செல்கின்றனர். பிரதமருக்கு தேவையான உடைகள் உட்பட பல விஷயங்களை இந்த ஐவர் தான் கையாளுகின்றனர்.

***

கூட்டணி ஆட்சி தான்!

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், தமிழக மக்களையும், அரசியல் தலைவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்றும், ஒரு பக்கம், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்புகள் சொல்கின்றன. இது போதாதென்று, த.வெ.க., ஆட்சி அமைக்கும் எனவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லியில் ஆலோசனை நடத்தி உள்ளாராம். தமிழகத்தை பொறுத்தவரை, எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது, அவரின் கணிப்பு.

‘தி.மு.க., கூட்டணியோ, அ.தி.மு.க., கூட்டணியோ அல்லது விஜயின் த.வெ.க.,வோ என, எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், அது கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும். கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல், யாரும் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள், 100 தொகுதிகளுக்கும் கீழ் தான் வெற்றி பெறும்; எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது’ என்றாராம் அமித் ஷா.

அ.தி.மு.க., தலைவர்களுடன் பேசி விட்டாராம் அமித் ஷா. தமிழக கூட்டணி தலைவர்களிடம், ‘மே 4 வரை அமைதியாக இருங்கள். தேர்தல் முடிவுகள் வெளியான பின், நாம் கலந்து பேசுவோம்’ என, சொல்லியிருக்கிறாரம்.

***

கருத்துகள் சொல்ல: ndussh@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us