மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்குவது தாமதம்
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்குவது தாமதம்
ADDED : ஆக 18, 2024 11:24 PM
பெங்களூரு : பள்ளி, கல்லுாரிகள் துவங்கி இரண்டரை மாதம் கடந்தும், பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளுக்கு, ஷூ, சாக்ஸ் வழங்கப்படவில்லை.
பெங்களூரு மாநகராட்சி சார்பில், 93 குழந்தைகள் காப்பகம், 16 தொடக்க பள்ளிகள், 34 உயர்நிலை பள்ளிகள், 19 பி.யு., கல்லுாரிகள், நான்கு பட்டப்படிப்பு கல்லுாரிகள், இரண்டு முதுகலை பட்டப்படிப்பு கல்லுாரிகள் நடத்தப்படுகின்றன. 2024 - 25ம் கல்வியாண்டில் 23,055 மாணவர்கள் அட்மிஷன் பெற்றுள்ளனர்.
நடப்பு கல்வியாண்டு வகுப்புகள் துவங்கி, இரண்டரை மாதம் கடந்துள்ளது. இதுவரை மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கவில்லை. செருப்பு அணிந்து பள்ளிக்கு வருகின்றனர்.
பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு, மாநகராட்சி பள்ளி மாணவர் - மாணவியருக்கு ஷூ, சாக்ஸ் வினியோகிக்கும் டெண்டரை, பாபு ஜெகன்ஜீவன் ராம் தோல் மேம்பாட்டு கார்ப்பரேஷன் பெற்றிருந்தது. மிகவும் தாமதமாக ஷூக்கள் வினியோகித்தது.
எனவே இம்முறை சுதர்ஷன் அண்ட் கோ என்ற தனியார் நிறுவனத்ததுக்கு, டெண்டர் வழங்கப்பட்டது.
டெண்டர் பெறும் நிறுவனம், மாநகராட்சிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் சுதர்ஷன் அண்ட் கோ நிறுவனம், இன்னும் வங்கி உத்தரவாதம் அளிக்கவில்லை.
எனவே ஷூ, சாக்ஸ் வினியோகிக்க அதிகாரப்பூர்வ உத்தரவு கடிதத்தை மாநகராட்சி தரவில்லை.
அந்த நிறுவனம் விதிமுறைப்படி, வங்கி உத்தரவாதம் அளித்த பின், மாநகராட்சியின் உத்தரவு கடிதம் கிடைக்கும். அதன்பின் மாணவர் - மாணவியருக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும். இதற்காக அவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.
ஆண்டுதோறும் மாநகராட்சி பள்ளி மாணவர் - மாணவியருக்கு ஸ்வெட்டர் வழங்குவது வழக்கம். கடந்த முறை ஸ்வெட்டர் வினியோகம் தாமதமானது. எனவே அவர்களின் பெற்றோரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.
இம்முறையும் அதே போன்று, ஸ்வெட்டருக்கான பணம் வழங்கப்படும். அக்டோபரில் அவரவர் வங்கி கணக்கில், பணம் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

