மோடியின் தியான திட்டம் : ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதிக்க கோரிக்கை
மோடியின் தியான திட்டம் : ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதிக்க கோரிக்கை
ADDED : மே 30, 2024 01:41 AM

புதுடில்லி, பிரதமர் மோடியின் தியான திட்டம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது எனக் கூறியுள்ள காங்கிரஸ், இதை ஊடகங்களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சித் தலைவர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா, அபிஷேக் மனு சிங்வி, சையத் நசீர் ஹுசைன் ஆகியோர் அடங்கிய குழு இது தொடர்பான மனுவை தேர்தல் கமிஷனிடம் நேற்று வழங்கியது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட தொகுதிகளில் நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. இன்று மாலை முதலே அங்கு பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் 48 மணி நேர மவுன காலத்தின் போது, பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுகிறார். அவரின் இந்த செயல் நடத்தை விதிகளுக்கு எதிரானது ஆகும்.
அவரின் தியானம் ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் போது, அது ஒருவகையான பிரசாரமாகவே கருதப்படுகிறது.
இது முழுக்க முழுக்க தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்பதால், அவரின் தியான திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த நிகழ்ச்சியை மவுனகாலமாக கருதப்படும் 48 மணிநேரத்துக்கு ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.