ADDED : மே 07, 2024 12:42 AM
ஷாதோல், மத்திய பிரதேசத்தில், சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்கச் சென்ற சப் - இன்ஸ்பெக்டரை, டிராக்டர் ஏற்றி கொலை செய்த நபர்களின் வீடுகளை, மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளியது.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஷாதோல் மாவட்டத்தில் உள்ள படோலி என்ற கிராமத்தில், சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, இரு கான்ஸ்டபிள்களுடன், உதவி சப் - இன்ஸ்பெக்டர் மகேந்திர பக்ரி, கடந்த 4ம் தேதி இரவு சம்பவ இடத்துக்குச் சென்றார். மணல் ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டரை நிறுத்த அவர் முயன்றார்.
அப்போது டிராக்டரில் அதிவேகமாக வந்த இருவர், உதவி சப் - இன்ஸ்பெக்டர் மகேந்திர பக்ரி மீது மோதினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அந்த டிராக்டர் சுரேந்திர சிங் என்பவருடையது என்றும், அவரது மகன் அசுதோஷ் சிங் டிராக்டரை ஓட்டி வந்ததும், அப்போது டிரைவர் ராஜ் ராவத் உடனிருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அசுதோஷ் சிங், ராஜ் ராவத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சுரேந்திர சிங்கை தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த டிராக்டர் உரிமையாளர் சுரேந்திர சிங்கை போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையே, டிராக்டர் டிரைவர் ராஜ் ராவத்தின் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை, மாவட்ட நிர்வாகத்தினர் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக இடித்து தள்ளினர்.
இதே போல், சுரேந்திர சிங்கின் 10 லட்சம் ரூபாய் மற்றும் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உயிரிழந்த உதவி சப் - இன்ஸ்பெக்டர் மகேந்திர பக்ரி குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, தேர்தல் கமிஷன் அனுமதி கேட்டு மாநில அரசு பரிந்துரை அனுப்பி உள்ளது.