ADDED : ஆக 04, 2024 10:23 PM
புதுடில்லி:சிவில் லைன்ஸ் கைபர் பாஸ் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் மற்றும் கட்டடங்கள் நேற்று இடித்துத் தள்ளப்பட்டன.
வடக்கு டில்லி சிவில் லைன்ஸ் கைபர் பாஸில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டு இருந்தன. அவற்றை அப்புறப்படுத்த நிலம் மற்றும் மேம்பாட்டுத் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்தது. அங்கு வசித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் நிலம் மற்றும் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய அவசியம் குறித்து மனுத்தாக்கல் செய்தனர்.
கடந்த மார்ச் 1ம் தேதி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை இடித்துத் தள்ள உத்தரவிட்டது. இதை எதிர்த்து இடிக்கும் பணிக்கு தடை விதிக்கக்கோரி குடியிருப்போர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஜூலை 9ம் தேதி அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நிலம் மற்றும் மேம்பாட்டுத் துறையினர் பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி 200க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை நேற்று இடித்துத் தள்ளினர்.
அங்கு வசித்த பூபிந்தர் சிங் பாட்டியா, “70 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறேன். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் இந்த வீட்டையும் கடையையும் கட்டினேன். இரண்டையும் இடித்து விட்டனர்,”என்றார்.
ஷஹானா பேகம் “கடந்த மாதம் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள என் வீட்டை இடித்தனர். இன்று என் மகள் வீட்டையும் இடித்து விட்டனர்,”என்றார் வருத்தத்துடன்.
தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற மனு பாக்கரின் பயிற்சியாளர் சமரேஷ் ஜங் மற்றும் காமன்வெல்த்தில் தங்கப் பதக்கம் வென்ற அவரது மனைவி அனுஜா ஆகியோரும் இங்குதான் வசிக்கின்றனர்.
கடந்த 1ம் தேதி மாலை பாரிஸ் நகரில் இருந்து திரும்பிய சம்ரேஷ் ஜங், தன் வீட்டுக்கு இடிப்பு அறிவிப்பு வந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவர் கூறுகையில், “ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை சரியான முறையில் செய்ய வேண்டும். இங்கு குடியிருக்கும் மக்களுக்கு வீடுகளை காலி செய்ய நேரம் கொடுக்க வேண்டும். ஒரே நாளில் ஒரு நபர் வீட்டை எப்படி காலி செய்ய முடியும்,”என்றார்.
கைபர் பாஸில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியதை அடுத்து அருகிலுள்ள இடங்களில் வீட்டு வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.