கர்நாடகாவை அச்சுறுத்தும் டெங்கு பாதிப்பு 7,000ஐ தாண்டியது
கர்நாடகாவை அச்சுறுத்தும் டெங்கு பாதிப்பு 7,000ஐ தாண்டியது
ADDED : ஜூலை 08, 2024 06:41 AM
கர்நாடகாவில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. பாதித்தோர் எண்ணிக்கை 7,000த்தை தாண்டி உள்ளது.
சீனாவின் ஊகான் நகரில் தோன்றிய, கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த 2020ல் வேகமாக பரவியது. கொரோனாவுக்கு முதல் பலியாக கர்நாடகாவின் கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் பலியானார். இதன்பின், நாடு முழுதும் வேகமாக பரவிய கொரோனாவால், தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆட்டிப்படைத்த கொரோனா ஓய்ந்து மக்கள் தற்போது நிம்மதியாக இருக்கின்றனர். தற்போது புதிய தலைவலியாக டெங்கு பாதிப்பு உருவெடுத்து உள்ளது.
* 5 வயது சிறுவன் பலி
கர்நாடகாவில் கடந்த மாதத்தில் இருந்து டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, மாநிலம் முழுதும் 7,006 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுதும் ஆறு பேர் உயிரிழந்திருந்தனர். கதக்கை சேர்ந்த 5 வயது சிறுவன் சிராய் ஒசமணி நேற்று மதியம் டெங்குக்கு உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
ஆங்காங்கே தேங்கி இருக்கும் மழை நீர், சுத்தமில்லாத குடிநீர் தொட்டிகள், டிரம்களில் சேகரிக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் இருந்து உருவாகும் 'ஏடிஸ்' என்ற பெண் கொசு கடிப்பதன் மூலம், டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது.
* அறிகுறிகள்
கர்நாடகாவில் பெரியவர்களுக்கு நிகராக குழந்தைகளையும் டெங்கு தாக்கி வருகிறது. திடீரென அதிக காய்ச்சல், தலைவலி, கண்ணில் எரிச்சல், மூட்டு வலி, வாந்தி, குமட்டல், உடலில் வீக்கம், காய்ச்சல் ஆரம்பித்த நான்கு நாட்களில் உடலில் தடுப்புகள் ஏற்படுவது அறிகுறியாக உள்ளது.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, டெங்கு பரிசோதனை செய்து கொள்ளுமாறு பொது மக்களை, சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
* பெங்களூரில் அதிகம்
தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், சுகாதார அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனையும் நடத்தி வருகிறார்.
மாநில தலைநகரான பெங்களூரில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு டெங்கு பாதிப்பு வேகமாக பரவுகிறது. பெங்களூரில் பாதிப்பு 2,000 நெருங்கி உள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் இறந்துள்ளார்.
பெங்களூரில் டெங்கு பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை, மாநகராட்சி, ஆஷா ஊழியர்கள் இணைந்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக நோட்டீஸ்களும் வழங்கி வருகின்றனர்.
* கொசு வலை
'வீடுகளில் துாங்கும் போது கொசுவலை போட்டுக் கொள்ளுங்கள்; உடல் முழுவதையும் மூடும் உடை அணிந்து கொள்ளுங்கள்; கொசுவர்த்தி ஏற்றி வைத்து கொள்ளுங்கள்' என்றும் அறிவுரை கூறுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் பஸ், ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களில் 'கொசு ஒழிப்பான்' மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெங்களூரு சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் டெங்கு நோயாளிகளை, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நேற்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பதற்றம் அடைய வேண்டாம். விரைவில் குணமடைவீர்கள் என்று ஆறுதல் படுத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
* இலவச பரிசோதனை
கர்நாடகாவில் ஜனவரியில் இருந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த மாதம் தொற்று நோயாக மாறியுள்ளது. தினமும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
நான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது டெங்கு பரிசோதனை இலவசமாக செய்ய உத்தரவிட்டேன். பா.ஜ., ஆட்சியில் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. இதுபோல டெங்கு பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும். இதற்கு 10 கோடி ரூபாய் செலவாகுமா. அந்த தொகையை அரசு விடுவிக்க வேண்டும்.
கொரோனா மாதிரி டெங்குவுக்கும் தணி வார்டு அமைக்கப்பட வேண்டும். அதிகாரிகள் 'ஏசி' அறையை விட்டு வெளியே வந்து வேலை செய்ய வேண்டும். நகரில் துாய்மை இல்லை. நகரை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்குவால் மக்கள் பயப்படுகின்றனர். ஆனால், அரசுக்கு எந்த பயமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
...பாக்ஸ்...
* உடனடியாக செய்யுங்க
கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே உத்தரவு:
மாநிலத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த, அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வினியோக தொட்டிகள், திறந்த வெளி தொட்டிகள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யுங்கள்.
அங்கன்வாடிகள், பள்ளி, கல்லுாரிகளில் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை உடனடியாக மேற்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
.
...பாக்ஸ்...
கொசு பேட்களுக்கு திடீர் மவுசு
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொசுக்களை பார்த்தாலே மக்கள் பயப்பட துவங்கி உள்ளனர். இதனால் கொசு பேட்களுக்கு மவுசு அதிகரித்து உள்ளது. கடந்த மாதம் வரை 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட பேட், தற்போது 250 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடைகளில் தற்போது ஒரு நாளைக்கு, குறைந்தது பத்து கொசு பேட்கள் விற்பனையாகிறது.
.......
...பாக்ஸ்...
* ரூ.50 அபராதம்
பெங்களூரில் டெங்குவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீட்டு வளாகத்தை சுத்தமாக வைக்காதவர்களிடமிருந்து 50 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
......
* ஸ்மார்ட்டான கொசுக்கள்
டி.ஐ.ஜி.எஸ்., என்ற ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த நவீன் குமார் கூறுகையில், ''கொசுக்கள் தற்போது மனிதர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து அதற்கு ஏற்ப செயல்பட்டு, ஸ்மார்ட் ஆக செயல்படுகின்றன. கொசுக்கள் வீட்டுக்குள் வராமல் இருக்க கதவுகள் அடைக்கப்படுவதை அவைகள் ஆர்வமாக கவனிக்கும். கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கும் என்பதும் கொசுக்களுக்கு தெரிந்திருக்கும். கொசுக்களை கொல்வதற்கு பதிலாக அவற்றின் இனப்பெருக்கத்தை தடுப்பது மட்டுமே, டெங்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும்,'' என்றார்
--- நமது நிருபர் -.