ADDED : ஆக 23, 2024 11:24 PM
பெங்களூரு : கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால், சுகாதாரத்துறை நெருக்கடியில் சிக்கியுள்ளது. 24 மணி நேரத்தில், 199 பேருக்கு டெங்கு உறுதியானது.
கர்நாடகாவில் சில மாதங்களாக பரவலாக மழை பெய்கிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால், கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இது டெங்கு அதிகரிக்க காரணமாகிறது. குறிப்பாக பெங்களூரில், டெங்கு மக்களை வாட்டி வதைக்கிறது.
நடப்பாண்டு ஜனவரி முதல், இதுவரை மாநிலத்தில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை, 23,164ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் 24 மணி நேரத்தில், 199 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை 10,000த்தை தாண்டியுள்ளது.
டெங்கு அதிகரிப்பது குறித்து, சட்டசபையிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனால் அரசு தர்ம சங்கடத்துக்கு ஆளானது. இதை தீவரமாக கருதிய, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, டெங்குவை கட்டுப்படுத்தும்படி உத்தரவிட்டார். இதற்காக கெடு விதித்தார்.
ஆனாலும் டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திண்டாடுகின்றனர். நோயாளிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மஹாதேவபுரா, ராஜாஜி நகர், மஹாலட்சுமி லே அவுட் உட்பட பல்வேறு புகுதிகளில் டெங்கு அதிகரித்துள்ளது.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மக்கள் பீதியில் உள்ளனர். இதை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என, சுகாதாரத்துறை மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.