சிக்கமகளூரில் பரவும் டெங்கு அமைச்சர் ஜார்ஜ் ஆலோசனை
சிக்கமகளூரில் பரவும் டெங்கு அமைச்சர் ஜார்ஜ் ஆலோசனை
ADDED : ஜூன் 20, 2024 06:08 AM

சிக்கமகளூரு: சிக்கமகளூரில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. மாவட்ட பொறுப்பு அமைச்சருமான, மின்சாரத் துறை அமைச்சர் ஜார்ஜ், சிக்கமகளூருக்கு சென்று, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சிக்கமகளூரில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாவட்ட அரசு மருத்துவமனையில், நுாற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். உள் நோயாளிகள் வார்டுகள் நிரம்பியுள்ளன.
டெங்கு அதிகரிப்பதால், அமைச்சர் ஜார்ஜ் சிக்கமகளூருக்கு நேற்று வந்தார். டெங்குவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின் அவர் அளித்த பேட்டி:
சில நாட்களாக சிக்கமகளூரில், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. தற்போது படிப்படியாக குறைகிறது. இதற்காக மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். டெங்கு குறித்து மாவட்ட கலெக்டர், சுகாதார அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்தேன்.
தண்ணீரை நீண்ட நாட்கள் சேகரித்து வைப்பதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. தண்ணீரை சேகரித்து வைக்க வேண்டாம் என, மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மாவட்டம் முழுதும் டெங்கு பரவாமல், விழிப்புடன் இருக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழைக்காலத்தில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்தால், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுகின்றன. மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.