சிக்கமகளூரில் டெங்கு பாதிப்பு; பா.ஜ., தலைவர்கள் நேரில் ஆறுதல்
சிக்கமகளூரில் டெங்கு பாதிப்பு; பா.ஜ., தலைவர்கள் நேரில் ஆறுதல்
ADDED : ஜூன் 12, 2024 12:21 AM
சிக்கமகளூரு : சிக்கமகளூரில் நாளுக்கு நாள் டெங்கு பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு, பா.ஜ., - எம்.பி., - எம்.எல்.சி., ஆறுதல் கூறினர்.
சிக்கமகளூரில் கடந்த பல நாட்களாக நகரம், கிராமப்புறங்களில் நாளுக்கு நாள் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 350க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாள் தோறும் பலருக்கும் டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த உடுப்பி - சிக்கமகளூரு பா.ஜ., - எம்.பி., கோட்டா சீனிவாச பூஜாரி, எம்.எல்.சி., சி.டி.ரவி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேற்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.
பின், சி.டி.ரவி அளித்த பேட்டி:
சிக்கமகளூரு நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் கடந்த 15 நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசினேன்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் பல நோயாளிகள் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், சுகாதார துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். டெங்கு கொசுக்களை ஒழிக்க வேண்டும். இல்லையெனில், பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.