சிறையில் இருந்தபடி வீடியோவில் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு
சிறையில் இருந்தபடி வீடியோவில் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு
ADDED : மே 02, 2024 01:30 AM
புதுடில்லி :வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அரசியல் தலைவர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரசாரம் செய்ய அனுமதிக்கக் கோரும் மனுவை புதுடில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டில்லியைச் சேர்ந்த சட்ட மாணவர் அமர்ஜித் குப்தா சார்பில், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
'தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், சில அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அவர்களால் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
'இது, அரசியலமைப்பு சட்டத்தின்கீழ், ஒரு கட்சியின் கொள்கைகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் உரிமையை பறிப்பதாக உள்ளது. அதனால், சிறையில் உள்ள அரசியல் தலைவர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு கூறியுள்ளதாவது:
நாங்கள் அரசியலுக்குள் நுழையக் கூடாது என்று விரும்புகிறோம். ஆனால், அரசியலுக்குள் எங்களை இழுத்து விடுகிறீர்கள். இது என்ன மாதிரியான ஒரு கோரிக்கை. இது மிகவும் ஆபத்தானது. அடிப்படை சட்ட கொள்கைகளுக்கு எதிரானது.
இவ்வாறு அனுமதி அளித்தால், கொலை வழக்கு, பலாத்கார வழக்கில் சிறையில் உள்ளவர்கள் எல்லாரும், தேர்தலுக்கு முன் கட்சியைத் துவக்கி பிரசாரம் செய்ய அனுமதி கேட்பர்.
மேலும், சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றங்கள் செயல்பட முடியும். சட்டங்களை, கொள்கைகளை நீதிமன்றங்கள் உருவாக்க முடியாது. அதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இந்த மனு தாக்கல் செய்ததற்காக மனுதாரருக்கு அபராதம் விதிக்கப் போவதாக அமர்வு கூறியது. மாணவர் என்பதால், அபராதம் விதிக்க வேண்டாம் என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதையேற்ற அமர்வு, நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் குறித்து அவருக்கு கற்றுத்தரும்படி கூறியது.

