ADDED : ஆக 04, 2024 01:34 AM
சண்டிகர்: ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள பாரிசில், 33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்திய ஹாக்கி அணி பங்கேற்கும் காலிறுதி போட்டியை நேரில் காண பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான பகவந்த் மான் திட்டமிட்டு இருந்தார்.
இதற்காக, ஆக., 3 - 9 வரை பாரிஸ் செல்ல அனுமதி வழங்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
பகவந்த் மானுக்கு 'இசட் - பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்குவதால், குறுகிய நேரத்தில் அதற்கு ஏற்பாடு செய்ய முடியாது எனக் கூறி, பாரிஸ் செல்ல அவருக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது.
இதற்கு பஞ்சாப் மாநில ஆம் ஆத்மியின் பொதுச் செயலர் ஹர்சந்த் சிங் பர்சத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஹாக்கி காலிறுதி போட்டியில் விளையாடும் இந்திய அணியில், பஞ்சாபைச் சேர்ந்த 10 பேர் விளையாடுகின்றனர். அவர்களை ஊக்குவிக்கவே முதல்வர் பகவந்த் மான் பாரிஸ் செல்ல இருந்தார்.
அவருக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதன் வாயிலாக, பஞ்சாபில் உள்ள 3 கோடி மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புண்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், அமெரிக்காவில் நடக்கும் சட்ட சபை சபாநாயகர் கூட்டத்தில் பங்கேற்பதற்கு பஞ்சாப் சட்டசபை சபாநாயகர் குல்சார் சிங் சந்த்வானுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கும் ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது.