ADDED : மே 12, 2024 01:39 AM

சுல்தான்பூர்:கட்சிக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்ததால் தான், வருணுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, ''வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா கூறினார்.
வாய்ப்பு
லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார், பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா.
அவருடைய மகன் வருணுக்கு, இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பல்வேறு விஷயங்களில் கட்சியை விமர்சித்து, அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுதி வந்ததால், வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிலிபிட் தொகுதியில், 1996 முதல், மேனகா அல்லது அவருடைய மகன் வருண், எம்.பி.,யாக இருந்துள்ளனர். கடந்த 1989ல் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வென்ற மேனகா, 1991 தேர்தலில் தோல்வியடைந்தார்.
அதே நேரத்தில், 1996ல் வென்றார். கடந்த 1998 மற்றும் 1999 தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, 2004 மற்றும் 2014ல் வென்றார். அவருடைய மகன் வருண், 2009 மற்றும் 2019ல் இந்தத் தொகுதியில் வென்றார்.
தற்போதைய தேர்தலில் சுல்தான்பூரில், பா.ஜ., வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். எட்டு முறை எம்.பி.,யான அவர் நேற்று கூறியுள்ளதாவது:
கட்சி குறித்து பல்வேறு விஷயங்களில் விமர்சித்து எழுதி வந்ததால் தான் வருணுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.
தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
எதுவும் கூற முடியாது
இந்தத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கட்சியின் முடிவை ஏற்கிறோம். எதிர்காலத்தில் மீண்டும் வாய்ப்பு தரப்படுமா என்பது குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது.
அதுபோல, மீண்டும் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது.
முடிவெடுக்கும் இடத்தில் நான் இல்லை. கட்சி கூறுவதை ஏற்றுக் கொள்வேன். இந்தத் தொகுதி யில் வெற்றி பெறுவேன் என்பதில் பெரும் நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.