எல்லா அமைச்சர்களுக்கும் துணை முதல்வர் பதவி அமைச்சர் பிரியங்க் கார்கே கிண்டல்
எல்லா அமைச்சர்களுக்கும் துணை முதல்வர் பதவி அமைச்சர் பிரியங்க் கார்கே கிண்டல்
ADDED : ஜூன் 25, 2024 05:37 AM

பெங்களூரு : ''எல்லா அமைச்சர்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்குவோமா?'' என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கிண்டலடித்துள்ளார்.
கர்நாடகாவில் சமீப காலமாக அமைதியாக இருந்த சில அமைச்சர்கள், மீண்டும் கூடுதல் துணை முதல்வர் பதவி வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கின்றனர். ஊடகத்தினர் முன்னிலையில் பேசுவதால், கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் அமைச்சர் பிரியங்க் கார்கே நேற்று அளித்த பேட்டி:
சமீபத்தில் தான், லோக்சபா தேர்தல் முடிந்தது. காங்கிரசுக்கு எதிர்பார்த்ததை விட, நான்கைந்து தொகுதிகள் குறைந்துள்ளது. தேர்தல் பொறுப்பை ஏற்றிருந்த அமைச்சர்கள், தோல்விக்கான காரணங்களை தன்னாய்வு செய்ய வேண்டும். எத்தனை அமைச்சர்கள், தங்களுக்கு அளித்த பொறுப்புகளை திறமையாக நிர்வகித்தனர்.
கூடுதல் துணை முதல்வர்கள் வேண்டும் என, கூறுவோர் ஊடகங்களின் முன்னிலையில் கோரிக்கை வைக்காமல், கட்சி மேலிடத்திடமோ அல்லது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலோ, வேண்டுகோள் வைக்கட்டும். இவர்களை துணை முதல்வராக்க ஊடகத்தினரால் முடியாது.
கூடுதல் துணை முதல்வர் கோரிக்கையே, நகைப்புக்குரியதாக தோன்றுகிறது. ஒரு முதல்வரை விட்டு விட்டு, மற்ற அமைச்சர்கள் அனைவரும் துணை முதல்வராகட்டும். அனைத்து சமுதாயத்தினருக்கும் முக்கியத்துவம் கிடைத்ததாக இருக்கும்.
'நீட்' தேர்வில் நடந்த முறைகேடுகளால், 25 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இது பற்றி எதிர்க்கட்சியின் அசோக், அஸ்வத் நாராயணா போன்ற தலைவர்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை?
இந்த விஷயத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் நோக்கில், அவசர சூழ்நிலையை திணித்ததற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.