தந்தை, மகளை பிரிப்பதில் விருப்பமில்லை துணை முதல்வர் சிவகுமார் விளக்கம்
தந்தை, மகளை பிரிப்பதில் விருப்பமில்லை துணை முதல்வர் சிவகுமார் விளக்கம்
ADDED : ஏப் 01, 2024 06:56 AM

பெங்களூரு : ''அரசியலுக்காக தந்தை, மகளை பிரிப்பதை நான் விரும்பவில்லை. எனவே பா.ஜ.,வின் யோகேஸ்வர் மகளை, காங்கிரசில் சேர்ப்பது குறித்து, ஆலோசித்து நிதானமாக முடிவு செய்வோம்,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
பா.ஜ., முன்னாள் அமைச்சர் யோகேஸ்வரின் மகள் நிஷா, என் வீட்டுக்கு வந்து, என்னை சந்தித்தார். அவரது தாயும் உடன் வந்திருந்தார். தன் தந்தை இடத்தில் என்னை வைத்துள்ளதாக, நிஷா கூறினார். அவர் புத்திசாலி, நல்ல அறிவாளி. தன் வீட்டு பிரச்னைகளை கூறினார்.
நிஷா சுதந்திரமானவர் இல்லை. அவர் திருமணமாகி, குடும்பஸ்தராக இருந்தால், வேறு விஷயம். தற்போது, தந்தை பாதுகாப்பில் இருக்கிறார். நிஷாவுக்கு திருமணம் செய்ய வேண்டும்; தாரை வார்த்து கொடுத்து, அட்சதை போட வேண்டும். இதை அவரது தந்தை செய்வதே நல்லது.
ரசியலுக்காக தந்தை, மகளை பிரிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அரசியல் ரீதியில் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைய, நிஷாவுக்கு சுதந்திரம் உள்ளது.
சென்னபட்டணா தொகுதியின் பா.ஜ., தொண்டர்கள், நிஷாவை காங்கிரசில் சேரும்படி நெருக்கடி கொடுக்கின்றனர். அனைத்தையும் மீறி, காங்கிரசுக்கு வருகிறேன் என்றால், என்னால் மறுக்க முடியாது.
யோகேஸ்வருக்கு இன்றைய குடும்ப சூழல் குறித்து தெரியவில்லை. ஆனால் அவரது மனைவி, மகளுக்கு தெரியும். அவர்களின் பொருளாதார சூழ்நிலை பற்றியும், எனக்கு தெரியும். நிஷாவை காங்கிரசில் சேர்ப்பது குறித்து, நிதானமாக முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர்கூறினார்.

