தம்பிக்கு அதிக ஓட்டு வாங்கி தர முடியாத துணை முதல்வர்
தம்பிக்கு அதிக ஓட்டு வாங்கி தர முடியாத துணை முதல்வர்
ADDED : ஏப் 27, 2024 11:15 PM

பெங்களூரு: சொந்த தொகுதியில் தம்பிக்கு அதிக ஓட்டு வாங்கி தர முடியாத, இக்கட்டான சூழ்நிலைக்கு, துணை முதல்வர் சிவகுமார் தள்ளப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக டாக்டர் மஞ்சுநாத், காங்கிரஸ் வேட்பாளராக துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் போட்டியிட்டனர்.
ஜெயதேவா இதய மருத்துவமனையின் இயக்குனராக இருந்து, பல உயிர்களை காப்பாற்றியவர் என்பதால், டாக்டர் மஞ்சுநாத்துக்கு ஆதரவு பெருகியது. அவர் வெற்றி பெற்றால், மத்திய அமைச்சர் ஆவார் என்றும் கூறப்பட்டது.
நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில், பெங்களூரு ரூரலில் 68.30 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. 2019 லோக்சபா தேர்தலில், 64.98 சதவீதம் ஓட்டுப் பதிவாகி இருந்தது. கடந்த தேர்தலை விட இம்முறை 3.32 சதவீத ஓட்டுகள், கூடுதலாக பதிவாகி உள்ளன.
பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, எட்டு சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதத்தை பார்த்தால், ஆனேக்கல்லில் 60.69 சதவீதம்; பெங்களூரு தெற்கில் 56.08; சென்னப்பட்டணாவில் 84.61; கனகபுராவில் 84.77; குனிகல்லில் 85.26; மாகடியில் 84.96; ராஜராஜேஸ்வரிநகரில் 56.06; ராம்நகரில் 84.56 சதவீதம் என ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
இதில் சென்னப்பட்டணா எம்.எல்.ஏ., குமாரசாமி. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் எம்.எல்.ஏ., பா.ஜ.,வின் முனிரத்னா, பெங்களூரு தெற்கு எம்.எல்.ஏ., - பா.ஜ.,வின் கிருஷ்ணப்பா. மற்ற ஐந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர்.
இவற்றில் கனகபுரா எம்.எல்.ஏ., துணை முதல்வர் சிவகுமார். இவர் தொகுதியை விட குனிகல், மாகடியில் அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
தன் சொந்த தொகுதியில், தம்பிக்கு அதிக ஓட்டு வாங்கி தர முடியாத, இக்கட்டான சூழ்நிலைக்கு சிவகுமார் தள்ளப்பட்டுள்ளார். மேலும், குமாரசாமி தொகுதியான சென்னப்பட்டணாவை விட, சிவகுமார் தொகுதியில் 0.16 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

