பசுமைத் திட்டங்களுக்கு முன்னுரிமை துணைநிலை கவர்னர் உறுதி
பசுமைத் திட்டங்களுக்கு முன்னுரிமை துணைநிலை கவர்னர் உறுதி
ADDED : மார் 07, 2025 10:26 PM
புதுடில்லி:“தலைநகர் டில்லியை பசுமையான மற்றும் தூய்மையான மாநகரமாக மாற்றும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,” என, துணைநிலை கவர்னர் சக்சேனா கூறினார்.
அம்ருத் பல்லுயிர் பூங்காவை நேற்று திறந்து வைத்த துணைநிலை கவர்னர் சக்சேனா பேசியதாவது:
தலைநகர் டில்லியை பசுமையான மற்றும் தூய்மையான மாநகரமாக மாற்றும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இதே இடத்தில் குப்பைகள் நிறைந்து கிடந்தது. தற்போது குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அழகிய பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
டில்லியில் சுத்தமான காற்ரு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுற்றுச் சூழலை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளோம். மாநகர் முழுதும் பசுமையான இடங்களை அதிகரிக்கிறோம். இந்தப் பூங்காவில் பார்வையாளர்கள் ஓய்வு எடுக்க 'கபே' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
'தூய்மையான மற்றும் பசுமையான டில்லி' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் பல புதிய திட்டங்களையும் செயல்படுத்த தயாராகி விட்டோம்.
மழைக் காலத்தில் வெள்ளநீரை சேமித்து வைக்க பூங்காவில் குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விதவிதமான 20,000 செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
அதேபோல, யமுனை நதியை சுத்தம் செய்யும் பணியும் அதிவேகமாக நடக்கிறது. முதல்வர் ரேகா குப்தா மற்றும் அமைச்சர்கள் இந்த வளர்ச்சிப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.