ADDED : மார் 14, 2025 11:30 PM
மாண்டியா : காதல் தோல்வியால், மகள் தற்கொலை செய்து கொண்டதால், மனம் நொந்து தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
மாண்டியா நகரின் ஹெப்பகவாடி கிராமத்தில் வசித்தவர் லட்சுமி, 50. இவரது மகள் விஜயலட்சுமி, 21.
இவரும், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் ஹரிகிருஷ்ணாவும் ஒன்றரை ஆண்டாக காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தனர்.
இதற்கிடையில் ஹரிகிருஷ்ணா, வேறு பெண்களுடன் நெருக்கமாக பழகினார். இதையறிந்து விஜயலட்சுமி தட்டிக் கேட்டார்.
'உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம்' என, விஜயலட்சுமி வலியுறுத்தினார்.
இதை ஏற்க மறுத்த ஹரிகிருஷ்ணா, தகாத வார்த்தைகளால் திட்டினார். ஏமாற்றத்தை தாங்க முடியாமல், 25 நாட்களுக்கு முன்பு, ரயில் முன் பாய்ந்து விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்.
மகளின் தற்கொலைக்கு, ஹரிகிருஷ்ணாவே காரணம் என, மாண்டியா ஊரக போலீஸ் நிலையத்தில், லட்சுமியின் குடும்பத்தினர் புகார் செய்தனர்.
ஆனால் புகார் அளித்தவர்கள் மீதே, போலீசார் வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
'மகளின் இறப்புக்கு நியாயம் கிடைக்கவில்லை' என, மனம் நொந்த லட்சுமி, நேற்று முன் தினம் நள்ளிரவு, துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஹரிகிருஷ்ணா, அவரது குடும்பத்தினரை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி, லட்சுமி குடும்பத்தினரும், கிராமத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.