பீதரில் 3 கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள 'தேவ தேவ வனம்'
பீதரில் 3 கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள 'தேவ தேவ வனம்'
ADDED : மே 09, 2024 06:34 AM

பீதரில் 3 கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள தேவ தேவ வனத்தில், 200க்கும் அதிகமான மருத்துவ குணம் கொண்ட செடிகள் அமைந்துள்ளன.
இது கர்நாடகாவின் மிகப்பெரிய தாவரவியல் பூங்காவாகும்.
கர்நாடகா என்றாலே, பெரும்பாலானோருக்கு தலைநகரான பெங்களூரில் லால்பாக் பூங்கா, கப்பன் பூங்கா, கோடைகாலத்திலும் இங்கு குளிராக இருக்கும் என்பது தான் தெரியும்.
கர்நாடகாவில் மிகப்பெரிய தாவரவியல் பூங்கா பீதரில் உள்ளது என்றால் யாருக்காவது தெரியுமா? ஆம், பீதர் டவுனில் இருந்து 6 கி.மீ., தொலைவில் பீதர் - ஹைதராபாத் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சஹாபூர் பாதுகாப்பு வனப்பகுதி.
கர்நாடகா சுற்றுலா துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வனப்பகுதி 3 கி.மீ., பரப்பளவில் அமைத்துள்ளது. இந்த வனம், சுற்றுச்சூழலுக்கு உகந்தபடி அமைந்துள்ளது.
மஹாபலேஸ்வரா கோவில்
இந்த வனப்பகுதியின் நுழைவு வாயிலில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட, 500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான 'மஹாபலேஸ்வரா' கோவில் அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் பஞ்சவடி வன, அசோக வன, ராசி வன, நவகிரக வன உள்ளிட்ட பக்தி பெயர்கள் கொண்ட 200க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் உள்ளன.
இந்த வனம் மக்கள் ஓய்வெடுக்கவும், தியானத்திற்காகவும் உருவாக்கப்பட்டது. குறிப்பாக 'பஞ்சவடி வனம்' மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது; 'நவகிரக வனம்' ஒவ்வொரு மரமும் ராசிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக மா மரம், 'கன்னி ராசி' என பெயரிடப்பட்டு உள்ளது.
தங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் சுற்றுலா பயணியர் விடுமுறை நாட்களில் இங்கு வந்து, இந்த இடத்தை அனுபவிக்க முடியும். குழந்தைகள் பொழுதுபோக்கவும் இங்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. நீர் ஸ்லைடுகள், வண்ணமயமான ஸ்லைடுகள் மற்றும் ஊஞ்சல்கள் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வனத்தில் நீங்கள் செல்லும் பகுதியிலும், அங்குள்ள தாவரங்கள் குறித்த முழு விபரமும் தெரிந்து கொள்ள தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணியருக்காக சுற்றுச்சூழல் குடிசைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்குள்ள நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், அந்த இடத்திற்கு அழகு சேர்க்கின்றன. பல வகையான பறவைகள், ஊர்வனங்கள், பாலுாட்டி விலங்குகள் உள்ளன. சுற்றுலா பயணியர், ஜீப் சவாரி அல்லது நடந்து கூட சுற்றிப் பார்க்கலாம். இங்கு பல மலையேற்ற பாதைகள் உள்ளன.
இங்கு செல்ல பெரியவர்களுக்கு 10 ரூபாயும்; சிறியவர்களுக்கு 5 ரூபாயும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் மதியம் 1:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். புதன்கிழமை தோறும் விடுமுறை.
எப்படி செல்வது?
பெங்களூரில் பீதர் ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து 7.5 கி.மீ., டாக்சி அல்லது ஆட்டோவில் இங்கு வரலாம். பஸ்சில் செல்பவர்கள், பீதர் டவுனில் இறங்கி, கேப் அல்லது ஆட்டோவில் இந்த வனப்பகுதிக்கு வரலாம்
- நமது சிறப்பு நிருபர் -
.