ADDED : ஏப் 24, 2024 08:27 AM

நெருக்கடி நிலைக்கு பின், முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு அரசியல் ரீதியில் மறுவாழ்வு கொடுத்தது சிக்கமகளூரு. இங்கு இவரது வெற்றிக்கு காரணமாக இருந்தது, அன்றைய முதல்வர் தேவராஜ் அர்சின் சிறப்பான ஆட்சியே காரணம்.
நாட்டில் 1975ல் நெருக்கடி நிலையை திணித்ததால், அன்றைய பிரதமர் இந்திராவுக்கு எதிராக மக்கள் திரும்பினர். 1977ல் நடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தின், ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா, இந்திய லோக்தளம் வேட்பாளர் ராஜ் நாராயணனிடம் தோற்றார்.
ஆயினும், இந்திராவை எப்படியாவது லோக்சபாவுக்கு தேர்வு செய்ய, காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். எந்த மாநிலத்தின் தொகுதியில் போட்டியிடுவது என, தேடியபோது காங்., ஆட்சி நடந்த கர்நாடகாவின் சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிடும்படி, ஆலோசனை கூறப்பட்டது. இந்திராவுக்கு தொகுதியை விட்டுக் கொடுக்க, அன்றைய சிக்கமகளூரு எம்.பி., சந்திரேகவுடா முன்வந்தார்.
சிக்கமகளூரு தொகுதியில், 50 சதவீதம் பெண்கள், 45 சதவீதம் பிற்படுத்தப்பட்ட, தலித், சிறுபான்மை வாக்காளர்கள் இருந்தனர். இவர்களுக்காக அன்றைய முதல்வர் தேவராஜ் அர்ஸ் பல திட்டங்களை செயல்படுத்தினார். இங்கு போட்டியிட்டால் வெற்றி எளிது என, இந்திரா நடத்திய ஆய்வில் தெரிந்தது. எனவே இந்தத் தொகுதியிலேயே போட்டியிட அவர் முடிவு செய்தார்.
சந்திரேகவுடாவும் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், இந்திரா லோக்சபாவுக்கு வருவதில் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு விருப்பம் இல்லை. இந்திராவை தோற்கடிக்க பல வழிகளில் முயற்சித்தார்.
இவரை எதிர்த்து ஜனதா பரிவார் சார்பில், வீரேந்திர பாட்டீல் களமிறங்கியிருந்தார். ஜார்ஜ் பெர்ணான்டஸ் உட்பட முக்கிய தலைவர்கள் பலர், இந்திராவுக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.
பிரசாரத்துக்கு வந்தபோது, சிக்கமகளூரின் களசா அருகில் உள்ள விருந்தினர் இல்லத்தில் இந்திரா தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு அறை வழங்கக் கூடாது என, அன்றைய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
எனவே, கர்காள் அருகில் குன்றின் மீதுள்ள விருந்தினர் இல்லத்துக்கு இந்திராவை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் மலைப்பாதையில் ஜீப் ஓட்ட, ஓட்டுனர் தயங்கினார். சந்திரகவுடாவே ஓட்டுனராக மாறி, ஜீப்பை ஓட்டி விருந்தினர் இல்லத்துக்கு இந்திராவை அழைத்து வந்தார். அப்போது, 'யு ஆர் குட் டிரைவர்' என, அவரை இந்திரா பாராட்டினார்.
மற்றொரு முறை சந்திரேகவுடாவின், சொந்த ஊரான தாரதஹள்ளியில் அவரது அண்ணன் வீட்டில் இந்திரா தங்கினார்.
அப்போது, அவரது அண்ணன் மாரடைப்பால் காலமானார். இதை கண்டு வருத்தமடைந்த இந்திரா, சடலத்துக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பிரசாரத்துக்கு புறப்பட்டார்.
அன்று முழுதும் அவர் எந்த கூட்டத்திலும் பேசவில்லை. உணவும் சாப்பிடவில்லை. மாலை ஒரு ஆப்பிள் மட்டும் சாப்பிட்டார். அந்த தேர்தலில், இந்திராவை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதாக, சந்திரேகவுடா கூறியிருந்தார்.
ஓட்டுப்பதிவு நடந்து முடிவு வெளியான போது, 77,333 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திரா, சந்திரே கவுடாவிடம், 'மீதமுள்ள 23,000 ஓட்டுகள் எங்கே?' என, நகைச்சுவையாக கேட்டார்.
இந்திராவுக்கு சிக்கமகளூரு அரசியல் ரீதியில் மறுவாழ்வு கொடுத்த தொகுதியாகும். ஆயினும், அவரது வெற்றிக்கு, அன்றைய கர்நாடக காங்., முதல்வர் தேவராஜ் அர்சின் சிறப்பான ஆட்சியே காரணமாக இருந்தது.

