ஹாசனில் தேவகவுடா பேரன் விரக்தி பா.ஜ., ஆதரவு இல்லாததால் கவலை
ஹாசனில் தேவகவுடா பேரன் விரக்தி பா.ஜ., ஆதரவு இல்லாததால் கவலை
ADDED : ஏப் 08, 2024 04:51 AM

ஹாசன்: பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ப்ரீதம் கவுடாவின் ஆதரவு இல்லாததால், ஹாசனில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் விரக்தியில் உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ம.ஜ.த.,வுக்கு, ஹாசன் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில், தற்போதைய எம்.பி.,யும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார்.
இதற்கு, ஹாசன் முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும், அக்கட்சியின் மாநில பொது செயலருமான ப்ரீதம் கவுடா, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுவரை பிரஜ்வலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. இருவரும் இணைந்து பிரசாரம் செய்யவில்லை.
பிரஜ்வல் எவ்வளவு முயற்சி செய்தும், ப்ரீதம் கவுடாவை சந்திக்க முடியவில்லை. இதனால், கடும் அதிருப்தியில் உள்ளார். தகவலறிந்த பா.ஜ., மேலிடம், சமாதானம் செய்யும்படி நேற்று முன்தினம் இரவு மாநில தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வாலை, ஹாசனுக்கு அனுப்பி வைத்தது.
அவரும், பிரஜ்வல் உட்பட பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த வேளையில் ப்ரீதம் கவுடா இல்லை.
இது குறித்து, மைசூரில் ராதா மோகன் தாஸ் அகர்வால் நேற்று கூறியதாவது:
ஹாசனில் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. ப்ரீதம்கவுடா குறித்து, பிரஜ்வல் என்னிடம் எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை.
ம.ஜ.த., தொண்டர்களை விட, பா.ஜ.,வினர் சிறப்பான முறையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ப்ரீதம்கவுடா, மைசூரு, சாம்ராஜ்நகர் தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளார்.
இதனால், அவர் அங்கு தேர்தல் பணியில் உள்ளார். தேவைப்படும் போது, ஹாசனுக்கு வருவார். நான் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவன். அங்கும் தேர்தல் நடக்கிறது. ஆனால், கர்நாடகா பொறுப்பாளராக இருப்பதால், நான் இங்கேயே உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

