ADDED : ஜூன் 01, 2024 01:38 AM

பெங்களூரு, பாலியல் வழக்கில் கைதான தேவகவுடா பேரன் எம்.பி., பிரஜ்வலை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர் ஹாசன் தொகுதியின் ம.ஜ.த., - எம்.பி.,யாக இருக்கிறார்; தற்போது முடிந்த தேர்தலிலும், இதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
இவர், சில பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த படங்கள், வீடியோக்கள் கடந்த மாதம் வெளியாகின. இதையடுத்து, அவர் ஜெர்மனி தப்பி சென்றார். அவர் மீது இரண்டு பலாத்கார வழக்குகள்; ஒரு பாலியல் தொல்லை வழக்கு பதிவானது.
ஜெர்மனியில் 34 நாட்கள் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் நேற்று முன்தினம் நள்ளிரவு விமானம் மூலம், பெங்களூரு வந்திறங்கினார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார், அதிகாலை 1:20 மணிக்கு அவரை கைது செய்தனர்.
நேற்று மதியம் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில், பிரஜ்வலுக்கு உடல் பரிசோதனை நடந்தது. பின், பெங்களூரு 42வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நீதிபதி சிவகுமார்முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவகுமார், ஏழு நாட்கள் பிரஜ்வலை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து சென்று, சிறப்பு புலனாய்வு குழுவினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவுக்கு சங்கர் பாணி
தமிழக பெண் போலீசார் பற்றி அவதுாறாக பேசியதால், யு டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவரை கோவையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு போலீஸ் வேனில் அழைத்து சென்ற போது, பாதுகாப்பு பணிக்கு பெண் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இதுபோல விமான நிலையத்தில் இருந்து, பிரஜ்வலை ஜீப்பில் அழைத்து வந்தது, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றது, நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றது எல்லாமே பெண் போலீஸ் தான்.
பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரஜ்வல் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவருக்கு பாடம் புகட்டவே, அவரை அழைத்து செல்ல பெண் போலீசார் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.